விசாகப்பட்டினம்:இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (பிப். 2) துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் சேர்த்து இருந்தது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 2ஆம் நாள் ஆட்டம் இன்று (பிப். 3) தொடங்கிய நிலையில் இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - அஸ்வின் ஆகிய இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன் வேகத்தை சீரான இடைவெளியில் கொண்டு சென்றனர். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் 20 ரன்களில் வெளியேறினார்.
மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் தனது கன்னி இரட்டை சதத்தை விளாசி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய பும்ரா 6 ரன்களிலும், முகேஷ் குமார் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 112 ஓவர்களில் இந்திய அணி 396 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியில் ஜெய்ஸ்வாலை தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் 35 ரன்களை தாண்டவில்லை என்பது குறிப்பிடக்கது. இங்கிலாந்து அணி தரப்பில் ரெஹான் அகமது, ஜோரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது.