சென்னை: இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் உள்ளது.
இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (பிப்.15) ராஜ்கோட்டில் உள்ள சவுராஸ்டிரா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உள்ளார்.
தற்போது நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மூலம், தனது 100வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுகிறார். மேலும், இவர் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16வது இங்கிலாந்து வீரர் ஆவார். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில், 179 இன்னிங்ஸ்ஸில் விளையாடி 6,251 ரன்களை குவித்து உள்ளார்.
அதிகபட்ச ஸ்கோர் 258 ஆகும். 36.34 சராசரியிலும், 59.31 ஸ்ட்ரைக் ரேட்டிலும் உள்ளார். மேலும், 99 போட்டிகளில் 13 சதங்களையும், ஒரு இரட்டை சதத்தையும், 31 அரை சதங்களையும் விளாசி அசத்தி உள்ளார். அது மட்டுமன்றி, 197 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார்.