நீலகிரி: உதகை அருகே கொல்லிமலை கிராமத்தில் கோத்தர் இன பழங்குடி மக்கள் தங்கள் ‘அய்னோர், அம்னோர்’ குல தெய்வதிருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டத்தில் கொல்லிமலை உட்பட பல்வேறு பகுதிகளில் கோத்தர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தங்களின் குலதெய்வ பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இக்கோயில், விழாவில் கோத்தர் இன மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அய்னோர், அம்னோர் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து பூஜைகள் செய்வதும் வழக்கமாகும்.
இவர்களுக்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருப்பதால் நடவு மற்றும் அறுவடை காலங்களில் இவர்கள் அனைவரும் ஒன்று கூடி வழிபாடுகள் செய்வர். மேலும், உணவும், விவசாயமும் நம் வாழ்வின் முக்கிய அங்கம்’ என்பதை வலியுறுத்தும் வகையில், பண்டிகையின்போது பழங்குடியின மக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் 'ஆட்குபஸ்’ என்ற தங்களது பாரம்பரிய வெள்ளை நிற உடைகளை அணிந்து பாரம்பரிய இசையுடன் நடனமாடுவது வழக்கமாகும்.
இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 20 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து அசத்திய அபி சித்தர்!
அதன்படி, இந்த வருடம் தங்களின் கலாச்சார இசையை இசைத்து, ஊர்வலமாக நடந்து வந்து அய்னோர், அம்னோர் கோவிலுக்கு வந்து, தங்களின் குலதெய்வத்திற்கு விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்துள்ளனர். தொடர்ந்து, ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக தங்களின் பாரம்பரிய கலாச்சார இசையை இசைத்தும், பாரம்பரிய நடனமாடியும் மகிழ்ந்தனர்.மேலும், இந்நிகழ்ச்சியில் கோத்தர் இனத்தைச் சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஏராளாமானோர் கண்டு களித்தனர்.