கிருஷ்ணகிரி: மாவட்டத்திலேயே முதல் எருது விடும் விழா ஓசூர் அடுத்த கோப்பசந்திரம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் இன்று (ஜனவரி 16) நடைபெற்றுள்ளது. இதில், 500க்கும் அதிகமான காளைகள், பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா சிறப்பானதாகும். இந்த வீர விளையாட்டு விழாவில் வேகமாக ஓடக்கூடிய காளைகள் மட்டுமே பங்கேற்கும். மாடுகளின் கொம்புகளில் அலங்கரிக்கப்பட்ட வண்ண தடுக்கைகள் கட்டப்பட்டு, இளைஞர்கள் சூழ்ந்திருக்க அவர்கள் மத்தியில் அவிழ்த்துவிடப்படும்.
இந்த நிலையில், ஓசூர் அடுத்த தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் எருது விடும் விழா இன்று நடைபெற்றுள்ளது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, வேப்பனஹள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட காளைகள், மாடுகள் பங்கேற்றன. இந்த எருது விடும் விழாவை ஒசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷ் தொடக்கி வைத்தார்.
இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 20 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து அசத்திய அபி சித்தர்!
இந்த விழாவில், காளைகளை அடக்க இளைஞர் கூட்டத்திற்கு இடையே கடும் போட்டியும், சவாலாகவும் இருந்து மல்லுக்கட்டினர். நேருக்குநேர் மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்த காளைகளை, காளையர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு அடக்கி வீரத்தை வெளிப்படுத்தி அடக்க முயன்றனர்.
எருது விடும் விழாவினை காண்பதற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை தலைமையில் 340 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சடலம் மீட்பு: இந்த நிலையில், எருது விடும் விழா நடந்த பகுதியிலிருந்து சில மீட்டர்கள் தூரத்திலேயே தென்பெண்ணை ஆற்றில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உத்தனப்பள்ளி போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞர் கானலட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (28) என்பதும், மதுபோதையில் இருந்ததால் தண்ணீரில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.