சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு உறவினர்கள், நண்பர்களுடன் சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். காணும் பொங்கலை முன்னிட்டு மெரினாவில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தலைநகர் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான வெளி மாவட்ட மக்கள் பொங்கல் பண்டிகைக்காக தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். பணி காரணமாக சென்னையில் இருப்பவர்களும், சென்னையை சேர்ந்தவர்களும், சென்னை அருகாமையில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தோரும் காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையை நோக்கி படையெடுத்தனர்.

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை பிராட்வே, வடசென்னை, தியாகராயநகர், பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மெரினா கடற்கரைக்கு சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதையடுத்து மதியம் முதலே ஏராளமானோர் மெரினா கடற்கரையில் குவிந்தனர். மெரினாவின் மணற்பரப்பில் அமர்ந்து ,குடும்பத்தோடு விளையாடி மகிழ்ந்தனர். மேலும் கட்டுச்சோறு கொண்டு வந்து குடும்பத்தினர்களுடன் அதனை உண்டு மகிழ்ந்தனர். குழந்தைகள் ராட்டினங்களில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் குதிரைகளிலும் பொதுமக்கள் பயணித்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: வண்டலூர் உயிரியியல் பூங்கா முதல் அகஸ்தியர் அருவி வரை... தமிழ்நாட்டில் களைகட்டிய காணும் பொங்கல்!
மேலும், மெரினா கடற்கரையில் விற்கப்பட்ட தேங்காய், மாங்காய், சுண்டல் உள்ளிட்ட நொறுக்கு தீனிகளை வாங்கியும் பொதுமக்கள் பொழுது போக்கில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரை எங்கும் மக்கள் கூட்டமாக குவிந்திருந்தனர். காணும் பொங்கலையொட்டி 16,000 காவலர்களும்,1,500 ஊர்காவல் படையினர் என சென்னை முழுவதும் 17,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மெரினாவிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மெரினா கடற்கரையில் தற்காலிக காவல் கட்டுபாட்டு அறைகள்,காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும், அதிக அலை வீசும் பகுதிக்குள் பொதுமக்கள் சென்று விடாமல் இருக்க கடல் ஓரத்தில் தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன. குற்றச்சம்பவங்களை தடுக்க உழைப்பாளர் சிலை முதல் கலங்கரைவிளக்கம் வரையில் மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர், ட்ரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் போலீசார் எச்சரிக்கை விடுத்தபடி இருந்தனர். கூட்டத்தைப் பயன்படுத்தி பொருட்களை திருடுவோரிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும், குழந்தைகளை தவற விட்டு விடாமல் இருக்கும்படியும் அறிவுறுத்தினர்.
அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவ குழுக்கள்,ஆம்புலன்ஸ் வாகனங்கள்,மீட்பு பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. குழந்தைகள் காணமால் போவதை தடுக்க குழந்தைகளின் கைகளில் அவர்களின் பெற்றோர் பெயர், முகவரி, மொபைல் எண்கள் அடங்கிய பட்டை கட்டப்பட்டது.