ஹைதராபாத்: இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வென்ற இரு பதக்கங்களை சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் திருப்பியளிக்கவுள்ளார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார். அண்மையில் இவர் தான் பெற்ற பதக்கங்கள் சேதமடைந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், உலகெங்கிலும் உள்ள பல விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் வென்ற பதக்கங்கள் தேய்ந்து போவதாகவும், பதக்கங்களின் மையத்தில் பதிக்கப்பட்ட இரும்புத் துண்டுகள் உதிர்ந்து போவதாகவும் சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் சர்வதேச ஒலிம்பிக் குழு சேதமடைந்த பதக்கங்களை திரும்ப பெற முடிவெடுத்துள்ளது. மேலும், அதற்கு மாற்று பதக்கங்களை தருவதாகவும் கூறியிருந்தது. அந்த வரிசையில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தனது இரு பதக்கங்களை திருப்பி தர முன் வந்துள்ளார். அதை பெற்றுக்கொள்ளவுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு மாற்று இரு வெண்கலப் பதக்கங்களை அவருக்கு தர வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: நானா பார்ம் அவுட்? ரஞ்சி கோப்பையில் என்ட்ரி தரும் ரோகித் ஷர்மா! விறுவிறுக்கும் பயிற்சி...
பாரிஸ் ஒலிம்பிக்கில் வழங்கப்படும் பதக்கங்கள் பிரபல வாட்ச் நிறுவனமான LVMH குழுமத்தின் சௌமெட் (Chaumet) நிறுவனம் வடிவமைத்து வருகிறது. பிரான்ஸ் அரசுக்கு சொந்தமான மொன்னை டி பாரிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் அந்நாட்டின் நாணயங்களையும் அச்சிட்டு வருகிறது. தற்போது சேதமடைந்த பதக்கங்கள் சர்வதேச ஒலிம்பிக் குழுவால் பெற்றபட்டு மொன்னை டி பாரிஸ் மூலம் மாற்றப்பட்டு அசல் பதக்கங்களாக மீண்டும் பொறிக்கப்பட்டு உரிய வீரர், வீராங்கனைகளிடம் ஒப்படைக்கவுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 5,084 தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் சுதந்திரத்திற்குப் பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார். தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் சுற்றில் முதல் வெண்கலப் பதக்கத்தை வென்றார். பின்னர் 22 வயதான சரப்ஜோத் சிங்குடன் இணைந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் இரண்டாவது வெண்கலப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.