ஐதராபாத்: 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக மொத்தம் உள்ள 10 அணி நிர்வாகங்களும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டது. பல்வேறு அணிகளில் அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் முக்கிய வீரர்கள் ரீடென்ஷன் லிஸ்ட்டில் இருந்து கழற்றி விடப்பட்டனர்.
லக்னோ அணியில் இருந்து கே.எல்.ராகுல், டெல்லி அணியில் இருந்து ரிஷப் பன்ட், பஞ்சாப்பில் இருந்து சாம் கர்ரன், 2024 ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் என முன்னணி அணிகளில் இருந்து கேப்டன்களே கழற்றிவிடப்பட்டனர். இப்படி சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே ஐபில் சீசனில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் 2025 ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தான் மெகா ஏலத்தில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்தடுத்து வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவதற்காக 2025 ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் இருந்து அவர் விலக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2023ஆம் ஆண்டு பென் ஸ்டோக்ஸ் விளையாடினார்.
அதிலும் காயம் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு ஆட்டங்களில் அவர் விளையாட முடியாத சூழல் நிலவியது. தொடர்ந்து இந்த ஆண்டு இங்கிலந்து மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஐபிஎல் சீசனில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் எதிர்வரும் டெஸ்ட் தொடர்களில் கவனம் செலுத்துவதற்காக 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரை முடித்த கையோடு இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா சென்று 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதையும் படிங்க:திட்டம் போட்டு விலகிய ஸ்ரேயாஸ்! மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட்டாகுமா? இல்ல சொதப்புமா?