செங்கல்பட்டு: சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று(பிப்.17) அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசன், சீமான் என அரசியலைச் சேர்ந்தவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் நடித்து வரும் படங்களில் இருந்து வாழ்த்துகளும் அறிவிப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’பராசக்தி’ திரைப்படக்குழு சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதே போன்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் தலைப்பு வாழ்த்துகளுடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு மதராஸி என தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை முன்னிட்டு மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் குடும்பத்தினரும் சாமி தரிசனம் செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோயில் 108 வைணவ திவ்விய திருத்தலங்களில் 63வது ஸ்தலமாக விளங்குகிறது.
இங்கு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தமிழர்களின் பாரம்பரிய வேட்டி- சட்டை அணிந்து மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு தனது மனைவியுடன் வந்தார். கோயில் வளாகத்தில் உள்ள கருடாழ்வார் சன்னதியில் பஞ்சமியை முன்னிட்டு தனது மனைவியுடன் சிறப்பு பூஜை செய்தார்.
இதையும் படிங்க: ”இயக்குநர்களுக்கு சமூக உணர்வு வேண்டும்”... ’கூரன்’ பட நிகழ்வில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு!
பிறகு தலசயனப் பெருமாள், நிலமங்கை தாயார் சன்னிதியில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் முண்டியடித்து கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் கோயிலுகு வந்த நரிக்குறவ பெண்களுடன் சிவகார்த்திகேயன் செல்ஃபி எடுத்து கொண்டார். கோயில் பணியாளர்கள், பொது மக்கள் என அனைவரும் சிவகார்த்திகேயனுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.