நெல்லை: திருநெல்வேலியில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் செல்லப்பாண்டியன் சிலை மேம்பாலம் இறங்கும் பகுதியில் இரவில் அதிக நேரம் நடுரோட்டில் நிறுத்தி சரக்குகளையும், பயணிகளையும் ஏற்றிச் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
மாலை 6 மணியில் இருந்து இரவு 12 மணி வரையிலும் பல்வேறு வழித்தடங்களுக்கும் செல்லக்கூடிய ஆம்னி பஸ்கள் இந்த வழியாக வந்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. ஆனால் அங்கு மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிதண்ணீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படுவது இல்லை என்று தொடர்ந்து புகார்கள் உள்ளன.
ஆம்னி பஸ் நிறுத்தும் பகுதி மாலையில் தொடங்கி சுமார் 6 மணி நேரம் வரை பரபரப்பாக இருக்கும். பயணிகள் தங்கள் உடைமைகளை சுமந்தபடி வருவார்கள். ஆனால் அவர்கள் பேருந்து வரும் வரை அமர்வதற்கு அந்த இடத்தில் இருக்கை வசதி எதுவும் இல்லை.
இதனால் பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் அமர முடியாமல் கடும் சிரமம் அடைந்து வந்தனர். மேலும் முதியவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கும். இதனை கவனித்த அருகில் உள்ள வாகன காப்பகத்தின் உரிமையாளர் ஒருவர், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்காக நாற்காலிகளை வழங்கி வருகிறார். மேலும் அதற்கு கட்டணமாக ரூ.10 வசூலித்து வருகிறார். தினமும் மாலை 6 மணிக்கு அந்த பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் இருக்கைகளை வரிசையாக போடும் அந்த நபர், 12 மணி வரை அமர்வதற்கு ரூ.10 கட்டணம் என்று பேப்பரில் எழுதி அந்த இருக்கையில் ஒட்டியும் வைத்துள்ளார்.
இதே போல் செல்போன் சார்ஜ் போடுவதற்கும் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக இந்த ஐடியாவை பயன்படுத்தி அவர் வசூல் செய்து வருகிறார். பஸ் ஏறுவதற்காக வரும் பயணிகளும், எவ்வளவு நேரம் தான் நின்று கொண்டே இருப்பது என சோர்வாகி ரூ.10 தானே என்று நினைத்து காசை கொடுத்துவிட்டு இருக்கையில் அமருகின்றனர்.
இதையும் படிங்க: "ரூ.40 லட்சம் காருக்கு 20 ஆயிரம் தர மாட்டாரா?"...மோட்டார் வாகன ஆய்வாளர் பேசிய ஆடியோ வைரல்! - RTO BRIBE CASE
பயணிகள் வசதிக்கு ஏற்ப இருபுறமும் கைப்பிடி உள்ளவை, கைப்பிடி இல்லாதவை என விதவிதான இருக்கைகளை அந்த நபர் போட்டு வைத்துள்ளார். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்களது பேருந்தில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது.