மதுரை: திருப்பரங்குன்றம் வழிபாடு பிரச்சனை தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட நான்கு சங்கத்தின் உறுப்பினர்கள் 30 பேர் அனுமதியின்றி துண்டு பிரசுரம் வழங்கிய குற்றத்திற்காக, வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், திருப்பரங்குன்றம் பகுதியில் மத நல்லிணக்கம், மத ஒற்றுமையினை வலியுறுத்தி மனுதாரர் அமைப்பின் சார்பிலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை இணைத்து நோட்டீஸ் வழங்கப்பட இருப்பதாகக் கடந்த 14ஆம் தேதி காவல்துறை அனுமதி கேட்டு வந்தனர்.
அப்போது கடந்த 4ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் தொடர்பாக திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்காத நிலையில், இந்த துண்டு பிரசாரம் வழங்கும் நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
அதனை மீறி நேற்று காலை 8 மணி அளவில் இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் உள்ளிட்ட நான்கு சங்கங்கள் இணைந்து 30க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் இடையூறு செய்யும் விதமாக துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சனை ஏற்படுத்தி வந்ததாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: அனைத்து வழக்குகளும் தள்ளுபடி - மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!
அதாவது, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும், பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்தி பொது சாலையை மறித்தல், அந்த வழியே வந்து போகும் பொதுமக்களை வழிமறித்து அவர்களின் அமைதியை கெடுத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், துண்டு பிரசாரம் வழங்கிய போது தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு கூறியும் கலைந்து செல்லாமல், மீண்டும் துண்டு பிரசுரம் வழங்கி இடையூறு செய்ததாகவும், மத நல்லிணக்கம் நோட்டீஸ் வழங்குவதாகக் கூறி மதப் பிரச்சினையை மீண்டும் தூண்டும் விதமாக செயல்பட்டதாகவும் திருப்பரங்குன்றம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.