ஐதராபாத்:பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி வளாகத்தில் பிசிசிஐ உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கான விதிமுறைகளை வகுப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
5 வீரர்களை தக்கவைக்கலாம்:
இந்நிலையில், 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளவும், Right to Match (RTM) என்கிற ஆர்டிஎம் முறையில் ஒரு வீரரை தக்கவைக்கவும் பிசிசிஐ அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதில், இந்திய அணியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக விளையாடாத வீரர்களை Right to Match (RTM) என்கிற ஆர்டிம் முறையில் ஐபிஎல் அணியில் தக்கவைக்க வழிவகை செய்யப்படுகிறது.
கடைசியாக 2018ஆம் ஆண்டு இந்த ஆர்டிஎம் முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அடுத்த ஐபிஎல் சீசனில் அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்கவைக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆர்டிஎம் முறை அறிமுகப்படுத்தப்படவில்லை.
நவம்பரில் ஏலம்:
2018ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு பின்னர் தற்போது தான் ஆர்டிஎம் முறை அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. வரும் நவம்பர் மாதம் ஐபிஎல் ஏலத்தை நடத்த பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் ஐபிஎல் அணிகளுடன் பிசிசிஐ நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.