மும்பை:சர்வதேச அளவில் பணம் கொழிக்கும் கிரிக்கெட் தொடராக ஐபிஎல் உள்ளது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என பல்வேறு நாடுகளில் பிரீமியர் 20 ஓவர் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தாலும் ஐபிஎல் கிரிக்கெட் போன்று எதற்கும் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
அந்த வகையில் ஆண்டுதோறும் பிசிசிஐ, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மூலம் பெரிய தொகையை வருவாயாக ஈட்டி வருகிறது. இதில் 2022ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்ற தொகையை காட்டிலும் 2023ஆம் ஆண்டு 116 சதவீதம் அதிக வருவாயை பிசிசிஐ ஈட்டி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மூலம் பிசிசிஐக்கு 2 ஆயிரத்து 367 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்நிலையில், 2023ஆம் ஆண்டு 5 ஆயிரத்து 120 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐயின் ஆண்டு அறிக்கையின்படி, 2023 ஐபிஎல் போட்டியின் மொத்த வருமானம் 78 சதவீதம் அதிகரித்து 11 ஆயிரத்து769 கோடி ரூபாயாகவும், செலவு 66 சதவீதம் அதிகரித்து 6 ஆயிரத்து 648 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருவாய் பெரும்பாலும் புதிய மீடியா உரிமைகளின் மூலம் கிடைக்கப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-27 ஆம் ஆண்டு வரை புதிய மீடியா உரிமம் கடந்த ஆண்டு 48 ஆயிரத்து 390 கோடி ரூபாய்க்கு விலைபோனது. டிஸ்னி ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் டிவி உரிமத்தை 23 ஆயிரத்து 575 கோடி ரூபாய்க்கும், டிஜிட்டல் உரிமத்தை வியாகாம் 18 நிறுவனத்தின் ஜியோ சினிமா 23 ஆயிரத்து 758 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது.