தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சாம்பியன்ஸ் டிராபி; பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு.. IND Vs PAK போட்டிகள் எங்கு நடக்கும்? - champions trophy 2025 - CHAMPIONS TROPHY 2025

champions trophy 2025: அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்த பிசிசிஐ கோரிக்கை விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஷா
ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஷா (Credits - IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 2:38 PM IST

டெல்லி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி 1998ம் ஆண்டு வங்கதேசத்தில் அறிமுகமானது. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை வென்றது. சாம்பியன்ஸ் டிராபியில் தற்போது வரை 8 தொடர்கள் நடைபெற்றுள்ளது. இறுதியாக 2017ல் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது.இதையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் 9வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை நடத்துகிறது.

இந்த தொடரில் பங்கு பெறுவதற்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இப்போட்டிகள் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மார்ச் 1ல் நடைபெற உள்ளது. இந்த மாதிரி அட்டவணையில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் லாகூர் மைதானத்தில் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

சர்வதேச தொடர்களை தவிர 2012க்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எந்த விதமான இருதரப்பு தொடர்களிலும் விளையாடவில்லை. மேலும் 2008க்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் எதுவும் மேற்கொள்ளவில்லை. எல்லைப் பிரச்சனைகள் முடியும் வரை பாகிஸ்தானுடம் இந்தியா இருதரப்பு போட்டிகள் எதிலும் பங்குபெறாது என சென்ற வருடம் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்திய அணி விளையாடும் போட்டிகளைத் துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசியிடம் கோர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையைப் பாகிஸ்தான் நடத்தியது. இந்த தொடரில் இந்திய அணி பங்குபெற்ற போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெற்றது. மேலும் இத்தொடரில் இந்தியா சாம்பியன் பட்டமும் வென்றது. இதுபோலவே அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என ஐசிசி கோரிக்கை விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: நடராஜன் அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. நடப்பு தொடரில் முதல் வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details