ஐதராபாத்: வங்கதேசம் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது.
அதன் பின் செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 16 பேர் கொண்ட இந்திய அணியை அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக் குழு செய்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல் ராகுல், சர்பராஸ் கான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஏறத்தாழ 21 மாதங்களுக்கு பின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும், துருவ் ஜுரெல் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், பும்ரா, ஆகாஷ் தீப் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் அணியில் இணைந்துள்ளார்.
இதில் புதிதாக யாஷ் தயாள் இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். அதேநேரம் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த சில மாதங்களாகவே இந்திய அணி இடதுகை வேகப்பந்து வீச்சாளரை தேடி வந்தது. அதற்கான போட்டியில் அர்ஷ்தீப் சிங், கலீல் அஹ்மத் மற்றும் யாஷ் தயாள் ஆகிய மூவரும் இருந்தனர்.
பலரும் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாஷ் தயாள் தேர்வு செய்யப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆகாஷ் தீப்புக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
துலீப் டிராபி தொடரின் முதல் போட்டியில் ஆகாஷ் தீப் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துருவ் ஜுரெல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த நிலையில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் விவரம் பின் வருமாறு.
இந்தியா: ரோகித் சர்மா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, கே.எல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், யாஷ் தயாள்.
இதையும் படிங்க:சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகள போட்டிகள்: செப்.11 துவக்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி! - junior athletics championship