ஆன்டிகுவா:9வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று ஆட்டங்களில் நிறைவு பெற்ற நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவாவில் நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் இன்று (ஜூன்.22) பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷான்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இது பார்க்கப்படுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் வீரர்கள் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சுப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதேபோல் இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் வங்கதேசம் அணியும் பலம் வாய்ந்து காணப்படுகிறது.
அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். அரை இறுதி வாய்ப்பில் தொடர வங்கதேசம் அணியும் முனைப்பு காட்டும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.