சார்ஜா:9வது மகளிர் டி20 உலக கோப்பை (Womens T20 World Cup) கிரிக்கெட் தொடர் இன்று முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. சார்ஜா மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய முதலாவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் ஷோபனா மொஸ்தரி 36 ரன்களும், தொடக்க வீராங்கனை சாதி ரானி 29 ரன்களும் குவித்தனர்.
சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பு:
மற்ற வீராங்கனைகள் யாரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை. சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஸ்காட்லாந்து அணியில் அதிகபட்சமாக சசிகா ஹொர்லே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்து வீச்சில் வங்கதேச வீராங்கனைகள் அபாரமாக விளையாடினர்.
ஸ்காட்லாந்து அணியில் தொடக்க வீராங்கனை சாரா பிரைஸ் மட்டும் அணியை காக்க போராடிய நிலையில், மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். கேப்டன் கேத்ரீன் பிரைஸ் (11 ரன்), அலிசா லிஸ்ட்ர் (11 ரன்) ஆகியோர் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
வங்கதேசம் வெற்றி:
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ஸ்காட்லாந்து அணியால் 103 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அணியின் வெற்றிக்காக போராடிக் கொண்டு இருந்த விக்கெட் கீப்பர் சாரா பிரைஸ் 49 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். வங்கதேச மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு உலக கோப்பை சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
வங்கதேச அணியில் ரிது மொனி 2 விக்கெட்டும், மருபா அக்தர், நஹிதா அக்தர், பஹிமா கதுன், ரபேயா கான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையும் படிங்க:அஸ்வினுக்கு நடந்த அநியாயம்! பாரபட்சம் காட்டிய இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்! ஒராண்டு வீணானது! - Ashwin World Record