ராவல்பிண்டி: பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள வங்கதேசம் அணி 2 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்கியது.
டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 274 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய வங்கதேசம், 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தவித்தது.
வங்கதேச அணியில் அதிகபடச்மாக லிட்டன் தாஸ் 138 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து 12 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் ஆடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் வங்கதேச அணியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர்.
விக்கெட் கீப்பர் ரிஸ்வான் (43 ரன்), அஹா சல்மான் (47 ரன்) தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இதனால் 46.4 ஓவர்களில் பாகிஸ்தான் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி வங்கதேசம் அணி களமிறங்கியது.
வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். ஜாகீர் ஹசன் (40 ரன்), சத்மன் இஸ்லாம் (24 ரன்) ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்கு 58 ரன்கள் அடித்து அணி நிலையாக விளையாட வித்திட்டனர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் பொறுப்பை உணர்ந்து விளையாடியதால் வங்கதேசம் வெற்றிப் பாதையை நோக்கி பயணித்தது.
கேப்டன் நஜ்முல் ஹுசைன் சான்டோ 38 ரன், மொமிமுல் ஹக் 34 ரன் என அடுத்தடுத்து வீரர்கள் தங்கள் பங்குக்கு விளையாடி அட்டமிழந்தனர். இறுதியில் வங்கதேசம் அணி 56 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் மட்டும் இழந்து 185 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் வங்கதேசம் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வங்கதேசம் அணி வரலாற்று சாதனை படைத்தது. மேலும், ஏறத்தாழ 22 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வங்கதேசம் சாதனை படைத்து உள்ளது.
2002ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானுடன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் வங்கதேசம் அணி ஏறத்தாழ 22 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அறிவிப்பு! எப்போ? எங்கே? முழு விபரம்! - World Test Championship