மதுரை: மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்ட கட்டண படுக்கை சிகிச்சை பிரிவில் சுமார் ரூ.1 கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் பெருமிதம் தெரிவித்துள்ளது.
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கட்டண படுக்கை சிகிச்சைப் பிரிவுகள், விபத்து மற்றும் சிகிச்சைப்பிரிவில் 8 படுக்கைகளும் (4 Deluxe Room + 4 single room), பன்நோக்கு உயர் சிகிச்சைப் பிரிவில் 8 (3 Deluxe Room + 5 single room) படுக்கைகளுடன் என கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் தேதி தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் குறிப்பிட்ட கட்டண படுக்கை சிகிச்சை பிரிவு ஈட்டி உள்ள வருமானம் குறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் அருள் சுந்தரேஸ் குமார் கூறியிருப்பதாவது, "கட்டண படுக்கை சிகிச்சைப்பிரிவில் தற்போது வரை 919 நோயாளிகள் மற்றும் உடனிருப்போர் பயனடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்திலும் நுழைந்த HMPV வைரஸ்.. சென்னை, சேலத்தில் இருவருக்கு தொற்று பாதிப்பு!
அவர்களிடம் இருந்து தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலமாக இதுவரையில் ரூ.1,01,35,200/-(ஒரு கோடியே ஒரு லட்சத்து முப்பத்தி ஐந்தாயிரத்து இருநுாறு ரூபாய்) படுக்கை கட்டணமாக பெறப்பட்டுள்ளது. இச்சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு அறைகளிலும் உள்ள குளிர்சாதன வசதி, தொலைக்காட்சி, மெத்தைைகளுடன் கூடிய இருக்கைகள், சுடுதண்ணீர் (water Heater) மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆகிய வசதிகளுக்காக மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதர மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள், சிகிச்சைகளுக்கு தனிக் கட்டணம் ஏதும் கிடையாது. முதல்வர் வழிகாட்டுதலின்படி நிலைய மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் கட்டண படுக்கை சிகிச்சைப்பிரிவு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.