டெல்லி: ஐபிஎல் தொடரின் 64வது லீக் ஆட்டம் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன.
டெல்லி அணிக்கு இது கடைசி லீக் ஆட்டமாகும். இப்போட்டியில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம், லக்னோ அணிக்கு இது கடைசிக்கு முன்தின போட்டியாகும். அதாவது 13வது லீக் ஆட்டமாகும். இந்த அணிக்கும் தற்போது உள்ள இரண்டு போட்டிகளிலும் வென்றால் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. பவர் பிளேயில் டெல்லி அணியின் நம்பிக்கை வீரர் இப்போட்டியில் சோபிக்கவில்லை. ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் டக் அவுட் ஆனார்.
ஆனால், நிதான முறையில் போட்டியை அனுகும் அபிஷேக் போரல் இப்போட்டியில் அதிரடி காட்டினார். ஒன் டவுனில் இறங்கிய ஷாய் ஹோப்பும் அவருடன் சேர்ந்து ரன்களைக் குவித்து வந்தார். இதன் விளைவாக டெல்லி அணி பவர் பிளே முடிவில் 73 ரன்கள் எடுத்தது.
பின்னர், ஷாய் ஹோப் 38 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து அரைசதம் விளாசிய அபிஷேக் போரலும் 58 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து, பண்ட் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் கூட்டணி ரன்கள் சேர்க்க, மிடில் ஓவர்களில் சற்று சரிவில் இருந்த டெல்லி அணி மீண்டது.
20 ஓவர்கள் முடிவில், டெல்லி அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 58 ரன்களுடனும், அக்சர் படேல் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ அணி சார்பில் நவின்-உல்-அக் 2 விக்கெட்களும், அர்ஷத் கான் மற்றும் ரவி பிஸ்னோய் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து, லக்னோ அணி 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க:ஹைதராபாத்தில் அஜித்குமார்? குட் பேட் அக்லி முக்கிய அப்டேட்! - Good Bad Ugly Movie Shot Hyderabad