ஐதராபாத்:18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
தக்கவைப்பு வீரர்கள் பட்டியல்:
முன்னதாக கடந்த அக்டோபர் 31ஆம் ஆண்டு 10 அணிகளும், தங்கள் அணியில் தக்கவைப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. மொத்தம் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின் இந்த முறை நடைபெற உள்ள மெகா ஏலத்தில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
முகமது ஷமி, கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர் என இந்திய அணிக்காக நடப்பில் விளையாடி வரும் வீரர்களும் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளதால் மெகா ஏலம் அமர்க்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 42 வயதான இங்கிலாந்து வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அறிமுகமாக ஏலத்தில் பதிவு செய்துள்ளார்.
42 வயதில் ஐபிஎலில் அறிமுகம்:
அவர் வேறு யாரும் இல்லை, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆண்டர்சன் தனது 42வது வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமாக திட்டமிட்டுள்ளார். தனது அடிப்படைத் தொகையாக 1 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ஐபிஎல் ஏலத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முன்பதிவு செய்துள்ளார்.
சென்னை அணியில் விளையாடி வந்த பென் ஸ்டோக்ஸ் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் முன்பதிவு செய்து கொள்ளவில்லை. கடைசியாக அவர் சென்னை அணியில் 2023 ஆம் ஆண்டு விளையாடினார். அவரை சென்னை அணி 16 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு சென்னை அணி 2023ஆம் ஆண்டு ஏலத்தில் எடுத்தது.