விசாகப்பட்டினம்: இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விசாகப்பட்டினம் ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று(பிப்.2) நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பிளேயிங் லெவனில் இந்திய தரப்பில் கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜுக்குப் பதிலாக ரஜத் பட்டிதார், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோர் இணைந்தனர். அதேபோல், இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச், மார்க் வுட்டுக்குப் பதிலாக ஷோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் சேர்க்கப்பட்டனர்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் களத்தில் இறங்கினர். இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 14 ரன்களுக்கு 18 ஓவரில் தனது ஆட்டத்தை இழந்தார். பின்னர், ஜெய்ஸ்வால் இறங்கினார்.
சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அணிக்கு ரன்கள் குவித்த தருவாயில், சுப்மன் கில் 5 பவுண்டரிகள் வீதம் 34 ரன்கள் சேர்த்து ஆண்டர்சன் விளாசியப் பந்தை எதிர்கொள்ள முடியாமல் அவுட் ஆனார். ஜெய்ஸ்வால் 29.3வது ஓவரில் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார்.
நான்காவதாக ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கி, ஜெய்வாலுடன் இணைந்து இந்திய அணிக்கு ரன்களை சேர்த்தார். பின்னர், 48.3வது ஓவரில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ஜெய்ஸ்வால், டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டியில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். பின், ஸ்ரேயஸ் ஐயர் 3 பவுண்டரிகள் வீதம் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.