சென்னை:தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் ஹாக்கி இந்தியாவின் 14-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி இன்றுடன் நிறைவுபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் ஒடிசா அணியும், ஹரியானா அணி பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் பட்டம் வென்ற ஒடிசா அணியினருக்கு துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கினார்.
இதே போல் 2 ஆம் இடம் பிடித்த ஹரியானா அணிக்கும், 3ஆம் இடம் பிடித்த உத்தரப்பிரதேச அணிக்கும் வழங்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு ஹாக்கி சங்க தலைவர் சேகர் மனோகரன் கூறுகையில்," இந்த 14ஆவது சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் 9 ஒலிபியன்கள், 40 சர்வதேச வீரர்கள் பங்கேற்றார்கள்.
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் தேர்வுக்குழுவினரும் வந்திருந்தார்கள். இந்தத் தொடரில் தமிழ்நாடு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துணை முதலமைச்சராக உதயநிதி பதவியேற்ற பின் பல்வேறு போட்டிகள் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அனைத்து விளையாட்டுக்களும் வளர்ச்சிப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள்.