ஐதராபாத்:டென்னிஸ் விளையாட்டின் அதிக மதிப்புமிக்க தொடர்களில் ஒன்றாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் காணப்படுகின்றன. விளையாட்டில் ஒலிம்பிக் போட்டிக்கு நிகராக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்கள் பார்க்கப்படுகின்றன. அப்படி ஆண்டுக்கு நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்கள் நடத்தப்படுகின்றன.
ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெறுகிறது. தொடர்ந்து மே மாத இறுதியில் தொடங்கி ஜூன் மாதம் தொடக்கத்தில் பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடைபெறுகிறது. ஜூன் பிற்பகுதியில் இருந்து ஜூலை மாத தொடக்கத்தில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரும், ஆகஸ்ட் பிறபகுதியில் இருந்து செப்டம்பர் தொடக்கத்தின் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபனும் நடைபெறுகின்றன.
இதில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரை தவிர்த்து மற்ற மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நவீனமயமாக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. கிரிக்கெட் போன்று டென்னிஸ் போட்டியில் லைன் காலிங் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளும் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இதில் விதிவிலக்காக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் மட்டுமே உள்ளது. 147 ஆண்டுகால விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பழைய நடைமுறையே தொடர்ந்து வந்தது. அதாவது களத்தில் அனைத்து திசைகளிலும் அம்பயர்கள் மற்றும் லைன் நடுவர்கள் நிறுத்தப்பட்டு ஒவ்வொரு பந்தும் மனித இயக்கத்தின் மூலமே கண்காணிக்கப்பட்டு வந்தது.