திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(55). இவரது மனைவி செல்வராணி(53). இவர்களுக்கு ஜெனிபர் (30) என்ற மகள் உள்ளார். ஜெனிபர் அதே தெருவைச் சேர்ந்த மரிய குமார் (36) என்பவரைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் மரிய குமாருக்கும் அவரது மனைவி ஜெனிபருக்கும் குடும்பப் பிரச்சினை இருந்துள்ளதாகத் தெரிகிறது, இதன் காரணமாக ஜெனிபர் தனியாகப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெனிபர் வட மாநிலத்தைச் சேர்ந்த வேறு ஒருவரைக் காதலித்து அவருடன் குடும்பம் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மரிய குமார் அவரது மாமனார் பாஸ்கர் மற்றும் மாமியார் செல்வராணியிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மரிய குமார் மாமனார், மாமியார் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு (ஜன. 19) மரிய குமார் மாமனார் பாஸ்கர் வீட்டிற்குச் சென்ற தனது மனைவி வேறு ஒருவருடன் குடும்பம் நடத்துவது குறித்துப் பேசி தகராறு செய்துள்ளார். அப்போது பாஸ்கர் அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மரிய குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாமனார் பாஸ்கர் மற்றும் மாமியார் செல்வராணியைச் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஆவடி இரட்டைக் கொலை; 5 பேர் துப்பாக்கி முனையில் கைது..!
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து போலீசார் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மரிய குமார் மீது கொலை வழக்கு, வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து கொலை செய்த பிரிவுகளின் (BNS 332 B, 103, 351/ 3) கீழ் பெருமாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். மனைவியை கண்டிக்காத மாமனார், மாமியாரை மருமகன் ஒரே நேரத்தில் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.