சென்னை: கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய 'பிக்பாஸ் தமிழ் சீசன் 8' இன் கிராண்ட் ஃபினாலே நேற்று மாலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதில் முத்துக்குமரன் பிக் பாஸ் சீசன் 8 இன் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். கடந்த 7 சீசன்களாக இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வந்தார். இந்த சீசனில் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கினார். அப்போதிருந்தே அவர்க்கு வரவேற்புகளும் விமர்சனங்களும் வந்தன.
இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், முத்துக்குமரன், ஜாக்லின், செளந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, பவித்ரா ஜனனி, விஜே விஷால், ஆர்.ஜே. ஆனந்தி, சுனிதா, ரஞ்சித், தர்ஷா குப்தா, ஜெஃப்ரி, சஞ்சனா, அக்ஷிதா, அர்னவ், சத்யா மற்றும் தீபக் உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்கள் முதல் நாளில் இருந்து போட்டியிட ஆரம்பிக்க, நிகழ்ச்சியின் சில வாரங்களுக்குப் பின் ராணவ், ரயான், மஞ்சரி, சிவா, வர்ஷினி, ரியா முதலான ஆறு பேர் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் போட்டியில் இணைந்தனர்.
ஆக மொத்தம் இந்த சீசனில் 24 பேர் கலந்து கொள்ள, அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். போட்டி கடுமையாக கடுமையாக கடைசி வாரத்தில் ஆறு பேர் மட்டுமே போட்டியில் இருந்தனர். ஆனால் கடைசி வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க்கில் தோல்வியடைந்ததன் மூலம் வார இறுதிக்கு முன்பே ஜாக்குலின் எவிக்ஷனில் வெளியேறினார்.
இறுதிப்போட்டியாளர்களாக சவுந்தர்யா, ரயான், முத்துக்குமரன், வி.ஜே.விஷால், பவித்ரா ஜனனி ஆகியோர் தகுதிப்பெற்றனர். இறுதிப்போட்டியில் ரயானும், பவித்ராவும் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். முதல் 3 போட்டியளார்களான மற்ற மூவர் மேடைக்கு வந்த நிலையில், மேடையில் வைத்து விஷால் வெளியேற்றப்பட்டார்.
தொடர்ந்து டைட்டில் வின்னர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழ, முத்துக்குமரனை வெற்றியாளராக அறிவித்தார் விஜய்சேதுபதி. இந்த சீசனின் முதல் ரன்னர் அப் இடத்தை சௌந்தர்யா பிடித்தார். மேடையில் பிக் பாஸ் சீசன் 8 வெற்றியாளருக்கான பரிசுத்தொகை 40.50 லட்சம் முத்துக்குமரனுக்கு வழங்கப்பட்டது. பரிசுத்தொகை அளிக்கப்படும்போது முத்துக்குமரனின் பெற்றோரும் சௌந்தர்யாவும் உடன் இருந்தனர்.
வெற்றிக்குப் பின் பேசிய முத்துக்குமரன், “இந்த வெற்றி முத்துக்குமரனுக்கானது மட்டுமில்லை, வீட்டில் இருந்த 24 பேருக்குமானது. பிக் பாஸ் வீட்டில் எங்களுக்காக வேலை செய்த அந்த 500 பேருடைய உழைப்புதான் இது. எந்த ஏழ்மையிலும் வறுமையிலும் எந்த இருண்ட சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டும் விட்டுக்கொடுக்காத பெண்ணின் வெற்றி இது. அந்த பெண் என்னுடைய அம்மா.
என்னுடைய அம்மா எனக்கு இரண்டே விஷயங்களை சொல்லிக் கொடுத்தார்கள். ஒன்று தமிழ், இன்னொன்று யாராவது தவறு செய்தால் அதை தடுத்து நிறுத்த வேண்டும், நானே தவறு செய்தாலும் அதை யோசித்து மாற்ற வேண்டும் என கற்று கொடுத்திருக்கிறார். எனது அம்மா சொன்ன இன்னொன்று உழைப்பு.
இந்த பிக் பாஸ் வீட்டில் பிக் பாஸ் எல்லா போட்டியாளர்களுக்கும் ஒரு பெயர் வைத்தார். எனக்கு அவர் வைத்த பெயர் உழைப்பு, மகிழ்ச்சியாக உள்ளது. என்னால் வெற்றி பெற முடிந்தால் இங்கு யார் வேண்டுமானாலும் வெற்றி அடைய முடியும். இவ்வளவு நாள் எனக்கு வாக்களித்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்” என உணர்ச்சிவசமாக பேசினார்.
Thannambikaiyum, thanmaanathaiyum vittu koduukaadha oru ponnoda vetri 🔥#Muthukumaran's Perfect reply to those, who was taking the women card with Penn Dhaane tag!!pic.twitter.com/yX5GCivbwH#Soundariya fanatics first learn how to appreciate others victory without hatred from…
— Bad Boss (@StoryTimeWithK) January 19, 2025
இதையும் படிங்க: கல்லூரியில் குடித்துவிட்டு பாடினேன்.. ’பாட்டல் ராதா’ பட நிகழ்வில் இயக்குநர் மிஷ்கின் சர்ச்சை பேச்சு!
முன்னதாக பரிசுத்தொகையை வென்றால் என்ன செய்வீர்கள் என்ற விஜய்சேதுபதி கேட்டதற்கு, “இந்த போட்டியில் கிடைக்கும்பரிசுத்தொகையில் நா. முத்துக்குமார் எழுதிய ’அணிலாடும் முன்றில்’, ’வேடிக்கைப் பார்ப்பவன்’ மற்றும் செல்வேந்திரன் எழுதிய ’வாசிப்பது எப்படி?’ என்ற புத்தகங்களை அனைத்து அரசு பள்ளிகளிலும் பரிசாக வழங்குவேன். பாதியில் நிற்கும் வீட்டைக் கட்டி முடிப்பேன். என்னுடைய இரண்டு நண்பர்களுக்கு தொழில் தொடங்க உதவி செய்வேன்.” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த சீசனில் கமல்ஹாசன் அடிக்கடி புத்தக பரிந்துரைகள் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக முதல் ரன்னர் அப்பாக வென்ற சௌந்தர்யா பேசுகையில், “என்னை வெற்றியளாராக அறிவித்து விடுவீர்களோ என பயந்துவிட்டேன். நல்லவேளை அது நடக்கவில்லை. நான் ஜெயித்திருந்தால் என்னுடைய அப்பாவே இந்த விருதை வாங்கி முத்துக்குமரனிடம் கொடுத்திருப்பார். முத்துக்குமரன் வெற்றி பெற்றது மகிழ்வக உள்ளது. இந்த வெற்றிக்கு முத்துக்குமரன் தகுதியானவர்” என கலகலப்பாக பேசினார்.