திருவண்ணாமலை:வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அனைத்து வைணவத் தலங்களிலும் அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு வைபவங்கள் நடைபெற்றன. இதில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் கருவறையின் பின்புறம் உள்ள வேணுகோபால சுவாமி சன்னதியில் வேணுகோபால சுவாமி, பாமா, ருக்குமணிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது. பின், அதிகாலை 5.40 மணியளவில் கோயிலின் அமைந்துள்ள வைகுந்த வாயில் எனப்படும் சொக்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து சொக்கவாசல் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நுழைந்து அண்ணாமலையார் மற்றும் வேணுகோபால சுவாமிகளை கோஷங்கள் எழுப்பி தரிசனம் செய்தனர்.
அதேபோல் தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலிலும் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, உற்சவர் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக கூடியிருந்த ஏராளமான பொதுமக்களுக்கு காட்சியளித்தார்.
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க: வைகுண்ட ஏகாதசி: ரெங்கா! ரெங்கா! பெருமாளுடன் சொர்க்கவாசலைக் கடந்த பக்தர்கள்!
மேலும் மயிலாடுதுறையில் உள்ள திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலயம் பள்ளிகொண்ட பெருமாள் அருள்புரியும் பஞ்ச அரங்க ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமாகும். 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது ஆலயமாகும்.இந்நிலையில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெருமாள் மங்களகிரி படிச்சட்டத்தில் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், பெருமாள் பாசுரங்களை பட்டாச்சாரியார்கள் பாடினர். அதனை அடுத்து பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், தஞ்சாவூரில் கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சர்வ அலங்காரத்தில், அழகிய பட்டாடை மற்றும் சிறப்பு மலர் அலங்காரத்தில் சாரநாதப்பெருமாள் மங்கல வாத்தியங்கள் முழங்க, பட்டாச்சாரியார் பாசுரங்கள் பாட, சொர்க்கவாசலை கடந்து பவனி வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.