ஹைதராபாத்:ஹேக் ஹசீனாவின் எதிர்பாராத ராஜினாமாவின் விளைவாக, வங்கதேசத்தில் பதினைந்து ஆண்டுகால அரசியல் ஸ்திரத்தன்மை திடீரென முடிவுக்கு வந்துள்ளது. வரலாறுகிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர், ஆகஸ்ட் 15, 1975 அன்று, வங்கதேசத்தின் முதல் ஜனாதிபதி ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்நாட்டு இராணுவத்தின் தலைமையிலான சதிப்புரட்சியில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அந்த வரலாறு கிட்டத்தட்ட தற்போது திரும்பியுள்ளது. ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், வன்முறை மோதல்களால் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ளும் சில தெற்காசிய நாடுகளின் வரிசையில் வங்கதேசமும் இணைந்துள்ளது.
1971 வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் வழித்தோன்றல்களுக்கு அரசு வேலைகளில் 30% இடஒதுக்கீடு அளிக்கும் அரசின் கொள்கையை எதிர்த்து வெடித்த மாணவர்களின் நாடு தழுவிய போராட்டம், அவாமி லீக் தலைமையிலான அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இத்துடன் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டி மற்றும் பாகிஸ்தானின் மறைமுக ஆதரவு போன்ற வெளிப்புற தாக்கங்கள் வங்கதேசத்தின் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. ஆட்சி கவிழ்ப்புக்கு மாணவர்கள் போராட்டம் முதன்மை காரணமாக கருதப்பட்டாலும், இதில் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மிகவும் நுட்பமான பாத்திரத்தை வகித்தன. வரையறுக்கப்பட்ட ஜனநாயகம் மற்றும் இஸ்லாமிய சக்திகளின் மறுமலர்ச்சி ஆகிய நீண்டகால பிரச்சனைகள் வங்கதேசத்தின் அரசியலை கணிசமாக வடிவமைத்துள்ளன மற்றும் தற்போது அதனை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளன.
வங்கதேசத்தின் ஜனநாயக அனுபவம் சவால்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றிகள் நிறைந்தது. தேசியவாதம், ஜனநாயகம், சோசலிசம், மதச்சார்பின்மை ஆகிய தேசத்தின் அடிப்படை சித்தாந்தங்கள் நீண்டகாலமாக தொடர்ந்து தடைகளை எதிர்கொண்டு வந்துள்ளன. வங்கதேச ஜனநாயகத்தின் வரையறுக்கப்பட்ட வெற்றிக்கு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரண்டு காரணிகள் காரணமாக இருக்கலாம். முதலில் அரசியல் ஆட்சிகள். குறிப்பாக அவாமி லீக் தலைமையிலான ஆட்சியாளர்கள் ஜனநாயகக் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர்.
1975 இல் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படுகொலை மற்றும் 2024 இல் ஷேக் ஹசீனாவின் பதவி நீக்கம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் எதேச்சதிகாரப் போக்குகளுடன் இணைந்து எதிர்ப்பிற்கு சிறிதும் இடமில்லாமல், பலவீனமான அரசியல் சூழலை விளைவித்துள்ளது. வங்கதேச சுதந்திரத்தின் ஆரம்ப ஆண்டுகளில் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் ஆட்சியிலும் சரி, ஷேக் ஹசீனாவின் பதினைந்து ஆண்டுகால ஆட்சியிலும் சரி... பரவலான ஊழல், எதேச்சதிகார முடிவெடுத்தல் உள்ளிட்ட காரணிகள் ஆட்சிகளை நெருக்கடிக்குள் தள்ளி உள்ளன.
இவற்றில், ஜனவரி 2009 முதல் ஆகஸ்ட் 2024 வரை ஷேக் ஹசீனாவின் இரண்டாவது பதவிக்காலம், வங்கதேச அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலக்கட்டமாகும். ஷேக் ஹசீனா தலைமையிலான மகா கூட்டணி, 2008 டிசம்பரில் நடைபெற்ற தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பெற்று 2009 ஜனவரியில் ஆட்சி பொறுப்பேற்றது. 2008 பொதுத் தேர்தலை முன்னிட்டு அவாமி லீக் வெளியிட்ட அறிக்கை லங்கதேச மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை பிரதிபலித்தது. ஆனால், வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு அரசியல் அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் அந்த அரசு தோல்வியடைந்தது.
2014, 2018 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததில் இருந்து இது தெளிவாகத் தெரிந்தது. வங்கதேசத்தில் ஜனநாயகம் பின்னடைவை சந்தித்து வருவதாக விமர்சகர்கள் வாதிட்டனர், தேர்தல் நடைமுறைகள் வன்முறை மற்றும் மோசடிகளால் சிதைந்துவிட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் பிரதிநிதித்துவம், உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதில் அரசாங்கத்தின் செயல்திறன் குறைந்து வந்ததால், ஷேக் ஹசீனா தலைமையிலான அரசின் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பும் குறையத் தொடங்கியது. வலுவான, சட்டபூர்வமான மற்றும் ஜனநாயக எதிர்ப்பு இல்லாததால் எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சாதாரண குடிமக்களின் ஆதரவுடன் மாணவர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதிகாரத்தை தக்கவைக்க அவாமி லீக் அரசாங்கம் போராடியது
இவ்வாறு வங்கதேசத்தின் தொடர்ச்சியான அரசியல் உறுதியற்ற தன்மையும் இஸ்லாமிய சக்திகளின் தொடர்ச்சியான மறுமலர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். வங்கதேசம் உருவானது என்ற நம்பிக்கைக்கு மாறாக, ஒரு சுதந்திர அரசு இந்தியப் பிரிவினைக்கும் அரசியல் இஸ்லாத்தின் எழுச்சிக்கும் வழிவகுத்த இரு தேசக் கோட்பாட்டை மதிப்பிழக்கச் செய்தது, வங்கதேசத்தில் இஸ்லாமியத்தின் மீள் எழுச்சி இந்தக் கருத்துக்களை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் உள்ள பல்வேறு இஸ்லாமியப் பிரிவுகளான பியூரிட்டன்கள், போர்க்குணமிக்க சீர்திருத்தவாதிகள், ஆங்கிலோ-முகமதியர்கள் உள்ளிட்டோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாட்டில் ஜனநாயக ஆட்சிக்கு எதிரான பொதுவான தங்களின் எதிர்ப்பைப் பகிர்ந்து கொள்கின்றனர்.