வேலூர்: 2024 - 2025 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் நேற்று (ஜன. 31) தொடங்கிய நிலையில், நடப்பு நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். விரைவில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் நிதி சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மத்திய அரசால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். முத்தலாக்கை சட்ட விரோதமாக்கியதன் மூலம், சமூகத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் உடனடி விவாகரத்துகளில் இருந்து மத்திய அரசு பாதுகாப்பான சூழலை உருவாக்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சமுதாய பிரச்சினைகளில் மகளிருக்கு, அரசியல் பிரதிநிதித்துவம் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் அரசு உற்றுநோக்கி வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு என மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானம், முக்கிய முடிவெடுக்கும் செயல்முறைகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கைகள் மகளிருக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தின் ஒருங்கிணைந்த தொகுப்புகள் என்றும், ஒட்டுமொத்தமாக மதம் அல்லது கலாச்சாரம் எதுவாக இருந்தாலும், பெண்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலமாகவும், அதிக வாய்ப்புகளை வழங்குவதன் மூலமாகவும் பெண்களுக்கு சிறந்த மற்றும் பிரகாசமான எதிர்காலம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என நம்பிக்கை உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 58 நிமிட இடைக்கால பட்ஜெட் உரையில் கூறினார்.
நிதிநிலை அறிக்கையில் கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களையும், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியினையும் கூறினார். குறிப்பாக ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோரின் முன்னேற்றத்தினைக் கருத்தில் கொண்டு, பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றி இருப்பதாகவும் அவர் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இடைக்கால நிதிநிலை அறிக்கையில், வரும் ஐந்து ஆண்டுகளில் 2 கோடி குடும்பங்களுக்கு இலவச வீடுகள், ஒரு கோடி குடும்பங்களுக்கு தலா 300 யூனிட் மின்சாரம் போன்றவை இலவசமாக கிடைக்கும் வகையில் சூரிய மின் சக்தி திட்டம், வந்தே பாரத் ரயில் பெட்டிகளுக்கு இணையாக மற்ற ரயில்களில் பெட்டிகளை தரம் உயர்த்துதல், இரண்டு கோடி பெண்களுக்கு தொழில் முனைவோர்களாக மாற்றி, அவர்களை லட்சாதிபதியாக மாற்றும் திட்டம் என பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார். மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தாக்கல் செய்த திட்டங்களுக்கு, வேலூர் மாவட்ட மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:திமுக தேர்தல் பணிக்குழு கூட்டம்.. உதயநிதியின் அடுத்த மூவ் என்ன?