ஹைதராபாத்:ஆண்டுதோறும் ஜூலை 17 ஆம் நாள், சர்வதேச நீதி தினமாக கொண்டாடப்படுகிறது. 1998 ஆம் ஆண்டு ஜுலை 17 ஆம் தேதி, ரோம் சாசனத்தை உலகின் பல நாடுகள் ஏற்று கொண்டதன் அடையாளமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சாசனத்தை அடிப்படையாக கொண்டு, ஜுலை 1, 2002 இல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ( ஐசிசி) தோற்றவிக்கப்பட்டது. ரோம் சட்டத்துக்கு 60 நாடுகள் ஒப்புதல் அளித்திருந்ததன் தொடர்ச்சியாக ஐசிசி சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டது. ஜூலை 2024 நிலவரப்படி. உலகில் மொத்தம் 124 நாடுகள் ரோம் சாசனத்தை ஏற்று கொண்டுள்ளன. ஆனால், அமெரிக்கா, சீனாவுடன் சேர்ந்து இந்தியாவும் இச்சட்டத்தை ஏற்றுகொள்ளவில்லை.
2002 ஜுலை 1 ஆம் தேதி அல்லது அதன் பிறகு நிகழ்த்தப்பட்ட, சர்வதேச சட்டத்தின்கீழ் குற்றங்களாக கருதப்படும் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இட ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அதிகார வரம்பை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பெற்றுள்ளது. இனப்படுகொலை உள்ளிட்ட சர்வதேச குற்றங்களை செய்யும் ஒரு நாடு, அந்த குற்றத்தை ஏற்க மறுக்கும்போதோ அல்லது அதுகுறித்து சட்டப்பூர்வமான விசாரணையை மேற்கொள்ளாதபோதோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட முடியும். ஆதாவது,. ஐசிசி என்பது ஒரு நாட்டின் குற்ற வழக்குகள் விசாரணை நடைமுறைக்கு மாற்று அல்ல; மாறாக, தங்களது போர்க் குற்றங்களை ஒரு நாடு ஏற்க பிடிவாதமாக மறுக்கும்போது, அந்த குற்றம் குறி்த்து இந்த நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள இயலும்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) பரிந்துரைக்கும் குறிப்பிட்ட வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தையும் ஐசிசி பெற்றுள்ளது. இதன் காரணமாகவே, ஐசிசி ரோம் சாசனம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அடிபணிந்துவிட்டது என்ற விமர்சனமும் சர்வதேச அளவில் முன்வைக்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட வழக்குகளின் விசாரணையை ஐசிசிக்கு பரிந்துரைக்கும் அதிகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதன் மூலம், இவ்வழக்குகளின் விசாரணையில் அந்நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
மேலும், ஐநா பாதுகாப்பு கவுன்சில் அல்லது அதில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகள்,. குறிப்பிட்ட ஒரு குற்றம் குறித்து விசாரணை நடத்த பரிந்துரைக்காதபோதும், தாமாக முன்வந்து அக்குற்ற வழக்கை விசாரிக்கும் அதிகாரத்தையும் ஐசிசி பெற்றுள்ளது. ரோம் சட்டப் பிரிவு 15 (1) இந்த அதிகாரத்தை ஐசிசிக்கு அளித்துள்ளது. இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டபோது, உறுப்பு நாடுகள் இதுகுறித்து காரசாரமாக விவாதித்தன என்பதும், ஐசிசிக்கு தன்னிச்சை அதிகாரம் அளிக்கும் இச்சட்டப்பிரிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் குற்ற வழக்குகள், உண்மையில் விசாரணைக்கு எடுத்து கொள்ள உகந்தவையா? அதற்கு போதுமான சான்றுகள் உள்ளனவா? என்பவை குறித்து ஐசிசி வழக்கறிிஞர் அலுவலகம் முதல்கட்ட ஆய்வை மேற்கொள்ளும். அதில் வழக்கு விசாரணைக்கு ஏற்றுகொள்ள உகந்ததுதான் எனும்பட்சத்தில், குற்றத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை கேட்டு பெறவும், அவற்றை பகிரங்கப்படுத்தவும் ஐசிசி வழக்கறிஞருக்கு அதிகாரம் உண்டு. அத்துடன், குறிப்பிட்ட ஒரு வழக்கு குறித்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அல்லது உறுப்பு நாடுகளின் பரிந்துரைகளை நிராகரிக்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு. ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் அல்லது ஒரு நாட்டின் பிரதிநிதிக்கு (பிரதிவாதி) எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும்போது, சம்மந்தப்பட்ட பிரதிவாதியை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை ஐசிசி அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்தும் உள்ளது.
11 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டும், நான்கு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டும் உள்ள நிலையில், தற்போது ஐசிசியில் மொத்தம் 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அத்துடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் இதுவரை 49 கைது வாரன்ட்களை பிறப்பித்துள்ளனர். இவற்றில் 21 பேர் கைது செய்யப்பட்டு, ஐசிசி தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், பிடிவாரன்ட் உத்தரவுக்கு ஆளான 20 பேரை இன்னும் கைது செய்ய முடியாத நிலையில் தான் ஐசிசி உள்ளது.
பிடிவாரன்ட் உத்தரவுகளை செயல்படுத்துவதில் உறுப்பினர் நாடுகளின் ஒத்துழைப்பை எடுத்துரைக்கும் நேர்மறையான உதாரணங்கள் உள்ள அதே நேரத்தில், இந்த உத்தரவை செயல்படுத்துவதில் ஐசிசி கடுமையான சவால்களையும் சந்திந்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், லிபியாவின் முன்னாள் பிரதமர் கடாஃபி, கென்யாவின் முன்னாள் அதிபர் உஹுரு கென்யட்டா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் ஐசிசி பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்திருந்தும், அதனை செயல்படுத்த உறுப்பினர் நாடுகள் பெரும்பாலும் விரும்புவதில்லை. மாறாக, இத்தலைவர்களின் ராஜாங்கரீதியான பயணத்தை அவை வரவேற்க செய்கின்றன.
இதுபோன்ற காரணங்களால், ஐசிசி சக்திவாய்ந்த மேற்கத்திய நாடுகளின் ஊதுகுழலாகவும், பலவீனமான நாடுகளுக்கு எதிராகவும் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. முக்கியமாக ஆப்பிரிக்க கண்டத்தில் பல்வேறு குற்றங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அவற்றை களைய, ஐசிசி உரிய கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை சர்வதேச சமூகம் பிரதானமாக முன்வைக்கிறது. அதேசமயம், மியான்மர், பாலஸ்தீனம், ரஷ்யா, உக்ரைன் மற்றும் வெனிசுலா நாடுகள் மீது ஐசிசி அண்மையில் எடுத்த போர் குற்றம் உள்ளிட்டவை தொடர்பான நடவடிக்கைகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:மீண்டும் உச்சநீதிமன்றம் செல்லும் காவிரி வழக்கு! - தீராத நதிநீர் பிரச்சனை! - TN Cauvery issue