ஹைதராபாத்:இமயமலையில் 5000 க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உள்ளன. இவற்றில் 200 க்கும் மேற்பட்ட ஏரிகள் வெடிப்பு காரணமாக தற்போது நிரம்பி வழியும் அபாயத்தில் உள்ளன. காலநிலை மாற்றம் மற்றும் மனிதர்கள் புழக்கம் அதிகரிப்பின் விளைவாக இமயமலை பகுதியில் அதிகரித்துவரும் புவி வெப்பமயமாதலால் ,பனிப்பாறை ஏரிகள் வெடிக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. இதனால் இமயமலை பகுதி வெள்ளப் பெருக்கு ஆபத்தையும் எதிர்கொண்டுள்ளது. அபாய கட்டத்தில் உள்ள 200 ஏரிகளையும் தீவிரமாக கண்காணிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) முடிவு செய்துள்ளதை சமீபத்திய ஊடக செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
ஒரு பனிப்பாறை வெடிப்பும், அதனால் ஏற்படும் வெள்ளமும் அறிவியல் மொழியில் Glacial Lake Outburst Flood - GLOF என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. மிக அதிக கனமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கை விட அதிக சேதம் மற்றும் அழிவை பனிப்பாறை ஏரிகள் வெடிப்பால் உண்டாகும் வெள்ளம் ஏற்படுத்துகிறது. சமீப காலத்தில் இப்பேரிழவை இமயமலைப் பகுதிகள் சந்தித்துள்ளன. 2013 இல் பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு வெள்ளப்பெருக்கால் கேதார்நாத்தில் ஏற்பட்ட பேரழிவு 6000 உயிர்களை பலிகொண்டது இதன் பேராபத்தை உணர்த்துவதாக உள்ளது. இதேபோன்று, 2014 ஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் லடாக்கின் கியா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அக்கிராமத்தில் இருந்த வீடுகள், பண்ணைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்தன. நிலச்சரிவுகள் அல்லது பனிச்சரிவுகளால் அல்லாமல், பனிப்பாறைகள் உருகுவதால் நிலத்தடி நீர் அபாயகரமான அளவுக்கு திடீரென உயர்வதால் இப்பேரழிவு உண்டாவதாக புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2021 பிப்ரவரி 7 அன்று, உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி உள்ள ரிஷிகங்கா மற்றும் தெளலிகங்கா பள்ளத்தாக்குகளில் மீண்டுமொரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது 200 க்கும் மேற்பட்டோரின் உயிரை பலி கொண்டதுடன், இரண்டு நீர் மின் திட்டங்களிலும் கடுமையான சேதத்தை விளைவித்தது. லடாக் மற்றும் சாமோலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகள், 2013 இல் கேதார்நாத்தில் உண்டான திடீர் வெள்ளப்பெருக்கை போல் இல்லாமல் இருந்தது மட்டுமே ஒரே ஆறுதல். மேலும், வடாக் மற்றும் சாமோலில் உண்டாக இயற்கை பேரிடரில், மலையின் உச்சியில் பனிப்பாறை ஏரிகளில் இருந்து வெள்ளநீர் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதும் மற்றொரு ஆறுதலாக விஷயம்.
ஆனால், கேதார்நாத், லடாக், சாமோல் என இந்த அனைத்து இடங்களும், பனிக்கட்டிகளின் திடீர் உருகுதலால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு என்ற அடிப்படையில் தொடர்புடைவை. பெர்மாஃப்ரோல்ட் எனப்படும் மலை பனிக்கட்டி என்பது பனிப்பாறைகளுக்கு இடையே உள்ள விரிசல்கள் மற்றும் பிளவுகளில் உள்ள பனியாகும். செங்குத்தான சரிவுகளில் பனிப்பாறைகளை ஒருங்கிணைத்து அவற்றின் நிலைத்தன்மையை இப்பனிக்கட்டிகள் உறுதிப்படுத்துகின்றன. கடந்த சில தசாப்தங்களாக மெல்ல அதிகரித்துவரும் புவி வெப்பமயமாதலின் விளைவாக, பெர்மாஃப்ரோஸ்ட் பனிக்கட்டிகள் உருகி வருவது பனிப்பாறை மலை சரிவுகளை தூண்டுகிறது.
சிக்கிம் சந்தித்த பேரழிவு:அக்டோபர் 4, 2023 புதன்கிழமை அதிகாலை, சிக்கிமில் ஏற்பட்ட பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு வெள்ளப்பெருக்கு தொடர்பான பேரழிவு குறைந்தது 40 பேரின் உயிரை பறித்தது. மேலும் பலர் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. கனமழை காரணமாக சிக்கிமில் உள்ள தெற்கு லோனாக் பனிப்பாறை ஏரி வெடித்து, அதன் கீழுள்ள பகுதிகளில் பேரழிவு தரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் லாச்சென் பள்ளத்தாக்கில் டீஸ்டா ஆற்றில் பாயும் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டியது. காட்டாற்று வெள்ளத்தில் பல பாலங்கள் மற்றும் சாலைகள் இருக்கும் இடம் தெரியாமல் போயின. அத்துடன் சிக்கிமில் உள்ள சுங்தாங்கில் உள்ள மிகப்பெரிய நீர்மின் திட்டமான டீஸ்டா-III அணையையும் இந்த வெள்ளம் தாக்கி சேதத்தை ஏற்படுத்தியது.
கடல் மட்டத்திலிருந்து 5,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள லோனாக் பனிப்பாறை ஏரியில் மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இறுதியி்ல் சிக்கிமில் கடும் சேதத்தை விளைவித்தது. சிக்கிம் சந்தித்த பேரழிவு என்பது இமயமலையில் நடக்கும் இத்தகைய நிகழ்வுகளின் மறுநிகழ்வாகும். புவி வெப்பமயமாதலின் விளைவாக, பனிப்பாறைகள் மற்றும் பெர்மாஃப்ரோல்ட் எனப்படும் பனிக்கட்டிகள் உருகுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள், நீர்மின் திட்டங்கள் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகள் புவி வெப்பமயமாதலை அதிகரித்து, பேரழிவுக்கு வழிவகுக்கின்றன.