தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

ஓய்வுபெற்ற நீதிபதிகளை தற்காலிக நீதிபதிகளாக நியமித்தல்.. நீதித் துறையை வலுப்படுத்துமா? - AD HOC JUDGES

நீதிமன்றங்களில் அதிகரிக்கும் வழக்குகளை எதிர்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகளை தற்காலிக நீதிபதிகளாக நியமிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்து என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பேசுகிறது இக்கட்டுரை.

பிரதிநித்துவப்படம்
பிரதிநித்துவப்படம் (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2025, 8:25 PM IST

BY பிவிஎஸ் சைலஜா, உதவி பேராசிரியர், டாக்டர் பிஆர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி

ஹைதராபாத்:சட்டரீதியான தீர்வு முறையாக வழங்கப்படாதபோது, தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி எனக் குறிப்பிடப்படுகிறது. எந்தவிதத்திலும் இது நீதி அல்ல என்பதற்கு சமமானதாகும். குறிப்பாக தீவிரமான குற்றம் மற்றும் பொது வழக்குகளில் தாமதம் என்பது பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை நீடிக்கிறது. அவர்களுக்கு உரிமை இருந்தும் கூட அதனை மறுக்கும் வகையில் வழக்குகள் முடிவுக்கு வருவதில்லை.

தேசிய தரவு தொகுப்பின் 2025ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நிலவரப்படி 16 லட்சம் குற்ற வழக்குகள் உட்பட 62 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் இந்தியா முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் விசாரணை செய்து தீர்ப்பதற்காக நிலுவையில் இருக்கின்றன.

நிபந்தனைகள் தளர்வு:குற்ற வழக்கு முறையீடுகள் அதிகரித்து வருவதற்கு தீர்வு காணும் வகையில், உயர் நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகள் நியமனத்தில் நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் தளர்த்தி உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 224ஏ-ஐ பயன்படுத்தி ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் தற்காலிக நீதிபதிகளை நியமிக்கலாம்.

நீதித்துறை குறித்த கட்டுரைக்கான புள்ளிவிவரங்கள் (ETV Bharat)

பிரிவு 224ன் கீழ் நீதிபதிகள் நியமனத்துக்கான நடைமுறை குறிப்பாணை (Memorandum of Procedure-MOP)யின் 24ஆவது பத்தி நியமன நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதை நோக்கமாக கொண்டுள்ளது. 1998ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்-பதிவு சங்கம்-எதிர் மனுதாரர் இந்திய ஒன்றியம் (இரண்டாவது நீதிபதிகள் வழக்கு) ஆகியோரைக் கொண்ட வழக்கின் தீர்ப்பை பின்பற்றி நீதிபதிகள் நியமனத்துக்கான நடைமுறை குறிப்பாணை தயாரிக்கப்பட்டது.

நீதிபதிகள் நியமனம் என்பது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடாது. ஓர் உயர் நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதியின் அமர்வில் கூடுதலாக நியமிக்கப்படும் தற்காலிக நீதிபதிகள் இடம் பெறலாம். நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து தீர்மானிக்கலாம்.

தற்காலிக நீதிபதியானவர் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியாக குறிப்பிட்ட கால நோக்கத்துக்காக அல்லது குறிப்பிட்ட காலியிடம் என்ற அடிப்படையில் நியமிக்கப்படலாம். இப்படி நியமிக்கப்படும் நீதிபதிகள், வழக்கமான நீதிபதிகளுக்கான அதிகாரங்கள், முன்னுரிமைகளை கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் நிரந்தர நீதிபதிகளாக கருதப்படமாட்டார்கள்.

நீதித்துறை குறித்த கட்டுரைக்கான புள்ளிவிவரங்கள் (ETV Bharat)

முதலமைச்சரின் பங்கு:உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் தொடர்பு இன்றி தற்காலிக நீதிபதிகள் நியமிக்கப்படலாம். உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெற்ற நீதிபதியின் சம்மதத்தைப் பெற்று அதனை மாநிலத்தின் முதலமைச்சருக்கு தெரிவிக்க வேண்டும். அவர் அதனை ஆளுநரின் பார்வைக்கு அனுப்புவார்.

ஆளுநர் அதுகுறித்த கோப்பை மத்திய சட்டத் துறைக்கு அனுப்புவார். மத்திய சட்டத்துறை இது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசனை நடத்தும். இதன் தொடர்ச்சியாக பிரதமர், குடியரசு தலைவருக்கு இந்த விவகாரத்தில் அறிவுறுத்தல்கள் வழங்குவார். அனுமதி கிடைத்த பின்னர் முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிடுவார்.

தற்காலிக நீதிபதியின் பதவி காலம் என்பது இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் இருக்கும். தற்காலிக நீதிபதிகள் நியமனம் என்பது ஒருமுறை மட்டுமின்றி, கீழ் குறிப்பிட்ட பல்வேறு தருணங்களில் நியமிக்கப்படவாம். அனுமதிக்கப்பட்ட காலியிடங்கள் 20 சதவிகிதத்துக்கும் அதிகம் இருந்தால், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குகள் நிலுவை என்ற நிலையில், குறிப்பிட்ட பொருளில் அல்லது ஒட்டுமொத்தமாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கையை விடவும் வழக்குகள் தீர்க்கப்படும் சதவிகிதம் குறைவாக இருக்கும் நிலையில் அல்லது ஓராண்டு அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகளில் வழக்குகளில் தீர்வு என்பது தொடர்ச்சியாக குறைவாக இருந்தால், நிலுவை வழக்குகள் அதிகரிக்கப்படும் தருணங்களிலும் தற்காலிக நீதிபதிகள் நியமனம் இருக்கலாம்.

தற்காலிக நீதிபதிக்கான சம்பளம்:தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்படுவர், அதே நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதி பெறும் ஊதியங்கள் மற்றும் படிகளை பெறுவார். அதே நேரத்தில் தற்காலிக நீதிபதிக்கு பென்ஷன் வழங்கப்படாது. நீதித்துறையின் கண்ணியத்தை நிலைநாட்டும் வகையில் இதர சட்டப்பணிகளுக்கு தடை விதிக்கப்படுவர்.

இந்தியாவின் ஒருங்கிணைப்பட்ட நிதியில் இருந்து அவர்களுக்கான சம்பளம் மற்றும் படிகள் பெறப்படும். வாடகை இல்லாத வீடு வசதி அல்லது அதே விதிமுறையின் கீழ் அதற்கு இணையான படி மூலம் வழங்கப்படும். அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும் நிரந்தர நீதிபதி அல்லது கூடுதல் நீதிபதிகள் பெறக்கூடிய அதே பலன்களையும் தற்காலிகமாக நியமிக்கப்படும் நீதிபதிகளும் பெறுவார்கள்.

செயலற்ற விதி என இதனை உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 224ஏ -யின் படி மூன்று தற்காலிக நீதிபதிகள் மட்டுமே நியமிக்க முடியும். 1972ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சூரஜ் பான் என்பவர் தேர்தல் வழக்குகளை விசாரிப்பதற்காக ஒரு ஆண்டுக்கு தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1982 ஆம் ஆண்டு நீதிபதி ஆர்.வேணுகோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரது பதவிகாலம் 1983ஆம் ஆண்டு வரை ஒரு ஆண்டு நீடிக்கப்பட்டது. அயோத்தி வழக்கை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக ஓ.பி.ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டார்.

நீதித்துறை குறித்த கட்டுரைக்கான புள்ளிவிவரங்கள் (ETV Bharat)

பன்முக அணுகுமுறை:நீதித் துறையை நவீனமயமாக்கும் நோக்கம் கொண்ட புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை தீவிரமாக‍ அமல்படுத்துவது தொடர்ந்து சவாலாகவே உள்ளது. கட்டமைப்பு வரம்புகள், நடைமுறை தாமதங்கள், இடைநிலை சிக்கல்கள் காரணமாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

தற்காலிக நீதிபதிகள் நியமனம் என்பது தற்காலிக நிவாரணத்தை மட்டுமே தரும். ஆனால், நீண்டகால தேர்வு நடைமுறை, வெளிப்படைதன்மை குறித்த கவலைகள், நெருக்கமானவர்களுக்கு சலுகை அளித்தல் ஆகியவை இதன் தீவிர தன்மைக்கு குறைவு ஏற்படுத்தக் கூடும்.

நீதித் துறையின் நிலுவை வழக்குகளுக்கு உண்மையிலேயே தீர்வு காண நினைத்தால், அதற்கு நியமனங்களை நெறிப்படுத்துதல், சட்டரீதியான கட்டமைப்புகளை விரிவாக்குதல், டிஜிட்டல் ஒருங்கிணைப்பை உறுதி செய்தல், மாற்று தீர்வு தீர்மானங்களை முன்னெடுத்தல் ஆகிய பன்முக அணுமுறை தேவை.

முறையான மறுசீரமைப்பு, நீதித்துறை பொறுப்புடைமை, திறமையாக செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மட்டுமே இந்த சட்டங்கள்,விரைவான மற்றும் நேர்மையான நீதியை வழங்கும் நோக்கத்தை பூர்த்தி செய்வதாக இருக்கும்.

உயர் நிலையிலான நீதித்துறையை விடவும், கீழ்நிலையிலான நீதித்துறையிலும் நியமனங்கள் தேவை. கீழ் நீதிமன்றங்களில் உரிய நேரத்தில் நியமனம் செய்வது என்பது கீழ்நிலை அளவிலும் சட்டத்தின் ஆட்சியை நீதித்துறை உறுதி செய்ய முடியும். போதுமான எண்ணிக்கையிலான நீதிபதிகள் இல்லாத நிலை என்பது நீதித்துறையின் நம்பகத்தன்மையோடு சமரசம் செய்வதாக இருக்கும்.

(கட்டுரையாளர்:பிவிஎஸ் சைலஜா, உதவி பேராசிரியர், டாக்டர் பிஆர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி)

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்த கருத்துகளே. இவை ஈடிவி பாரத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை.

ABOUT THE AUTHOR

...view details