தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

ஐஏஎஸ் ஆக விரும்புவது அபிலாசையா?, உயரிய நோக்கமா? - சர்ச்சையின் பின்னணி என்ன? - upsc result 2024

ஐஏஎஸ் தேர்வு போட்டியாளர்கள் குறித்து பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலை சேர்ந்த அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து கடும் விமர்சனத்துக்குள்ளானது.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credits - ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 9:25 AM IST

ஹைதராபாத்:ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) இந்த ஆண்டு நடத்திய தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இத்தேர்வு முடிவுகளை அறிய போட்டியாளர்கள் மத்தியில் ஆவலும், முடிவுகள் பற்றிய மகிழ்ச்சியும் இருந்ததை காண முடிந்தது. ஆனால், பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலில் இடம்பெற்றிருக்கும் (PMEAC) ஓர் உயரதிகாரி சில மாதங்களுக்கு முன், யுபிஎஸ்சி தேர்வு குறித்து தெரிவித்திருந்த கருத்துகள் இந்த உற்சாகத்தை குன்ற செய்யும் விதத்தில் அமைந்திருந்தது, குடிமைப் பணிகள் தேர்வு போட்டியாளர்கள் குறித்த அவரது கருத்துகள் பொதுவெளியில் பேசுபொருளாகின.

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிப் பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற நம் இளைஞர்களின் உயரிய நோக்கத்தை அவர், 'அபிலாசை' என்று எதிர்மறையாக குறிப்பிட்டிருந்தார். அத்துடன் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராவது என்பது நேரத்தை மொத்தமாக விரையமாக்கும் செயல் என்று கூறியிருந்த அவர், நமது இளைஞர்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்று மத்திய அரசுத் துறைகளில் இணைச் செயலாளர் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்புவதற்கு பதிலாக, மற்றொரு எலன் மாஸ்க்காகவோ, முகேஷ் அம்பானியாகவோ வர விருப்பப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய குடிமைப் பணிகளில் காலியாகும் சில நூறு இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுகளில் ஏறத்தாழ 10 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இவர்களில் கலை மற்றும் அறிவியல் பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமின்றி மருத்துவம், நிர்வாகம், பட்டயக் கணக்கு, தொழில்நுட்பம் என பல்வேறு தொழில்முறை பட்டப்படிப்புகளை முடித்த இளைஞர்களும் அடங்குவர். தொழில்முறை பட்டப்படிப்புகளை சிறந்த கல்வி நிறுவனங்களில் முடித்தவர்கள் நினைத்தால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்களில் அதிக ஊதியத்துக்கு பணியில் சேர முடியும்.

இருப்பினும் லட்சக்கணக்கில் சம்பளம் என்பதை தாண்டி, மத்திய அரசுத் துறைகளில் உயர் பொறுப்பில் பணியாற்றுவதை கௌரவமாக கருதும் இளைஞர்கள் யுபிஎஸ்சி தேர்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். அத்துடன், திறமை வாய்ந்த அனைத்து இளைஞர்களுக்கும் பணிவாய்ப்பு அளிக்கும் அளவுக்கு வேலைவாய்ப்பு சந்தை இல்லை என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமீபத்திய அறிக்கை கவலை தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில், படித்த இளைஞர்கள் அரசுப் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அவர்களின் ஆர்வத்தை குலைக்கும் விதத்திலும், நோக்கத்தை கொச்சைப்படுத்தும் விதத்திலும் மத்திய அரசு அதிகாரி, யுபிஎஸ்சி தேர்வை குறைத்து மதிப்பிடும்படியாக கூறியிருக்கும் கருத்துகள் தேவையற்றது மற்றும் நியாயமற்றது.

உலக அளவில் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றான யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெற நமது இளைஞர்கள் மேற்கொள்ளும் கடின உழைப்பு வியக்கத்தக்கது. இந்த உழைப்புக்கேற்ற பலன் சிலருக்கு ஒரே வருடத்தில் கிடைக்கலாம். சிலருக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால், இத்தேர்வுக்காக ஆயத்தமாகும் காலமானது, ஒரு துறைச் சார்ந்த கொள்கை உருவாக்கத்தில் பொதிந்திருக்கும் அரசியல், பொருளாதார நுணுக்கங்கள், நாடு எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள், பரந்துவிரிந்த நமது தேசத்தின் பல்வேறு சமூக சூழலைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நகரமயமாக்கல் பற்றிய புரிதலை பெறும் வாய்ப்பை போட்டியாளர்களுக்கு அளிக்கிறது. கடும் போட்டிகள் நிறைந்த இத்தேர்வில் எப்படியும் வெற்றிப் பெற்றுவிடுவோம் என்ற மனஉறுதியுடன் முன்னெடுக்கப்படும் நமது இளைஞர்களின் முயற்சியில் வெற்றி மற்றும் பின்னடைவு இரண்டும் கலந்தே உள்ளது.

ஆனால் ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் போட்டியாளர்கள் தொடர்ந்து பலமுறை முயற்சிப்பது குறித்து மத்திய அரசு அதிகாரி பெரிதும் கவலை கொள்வதை அவரது சமீபத்திய கருத்துகளின் வாயிலாக உணர முடிகிறது. தேசிய அளவிலான யுபிஎஸ்சி போட்டி தேர்வுகளில் ஒரே இரவில் வெற்றிப் பெற்றுவிட முடியும் என்று அவர் நம்புவது அவரது இந்தப் பார்வைக்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால், இத்தேர்வில் சந்திக்கும் தோல்வியானது ஒரு இளைஞரின் ஒட்டுமொத்த இலக்கையையே தகர்த்திவிடும் என்பது போன்ற அவரது கருத்து, "உங்கள் இலக்கை அடையும் வரை அதை நோக்கி உறுதியாக முயற்சி செய்யுங்கள்" என்று நமது வேதங்களின் போதனைக்கு எதிராக அமைந்துள்ளது. அத்துடன், யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராவதை நேர விரயம் என்று அவர் மிகவும் எளிதாக கூறுவது, இளைஞர்ளை தனியார் துறை வேலைவாய்ப்புகளை நோக்கியே செல்லுமாறு மறைமுகமாக தூண்டுவதாகவே உள்ளது. ஆனால். தனியார் துறை வேலைவாய்ப்புகள் குறித்த யதார்த்த நிலைமை வேறுவிதமாக உள்ளது. 90 சதவீத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஒரே நேரத்தில் லாபகரமாக செயல்பட தவறிவிடுகின்றன என்று "ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ"வின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதற்காக, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலம் மனித ஆற்றல் வீணடிக்கப்படுகிறது என்று பொருளல்ல. மாறாக, இன்று தோல்வியில் கிடைக்கும் அனுபவ பாடங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நாளை சிறப்பாக வழிநடத்த உதவும்.

ஓர் இலக்கை நோக்கிய மனித முயற்சிகளில் தோல்விகளும், பின்னடைவுகளும் இல்லாமல் வெற்றி என்பது இல்லை. ஒருவரின் தொடர் முயற்சியை விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் வார்த்தைகளில் கூற வேண்டுமானால், "எனது முயற்சியில் 10 ஆயிரம் முறை தோற்கவில்லை; 10 ஆயிரம் வெற்றிகரமான வழிமுறைகளை கண்டுபிடித்துள்ளேன்" என்பதுதான் முயற்சிக்கான ஊக்க மருந்து. இந்திய விண்வெளி திட்டங்களில் ஓர் மைல்கல்லாக விளங்கும் சந்திரயான் -3 திட்டம், நம் இந்திய விஞ்ஞானிகளின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றிக்கான ஆகச்சிறந்த உதாரணமாக கூறலாம். எனவே, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு, அதற்காக தொடர் முயற்சிகளை மேற்கொள்வது உட்பட எந்தவொரு நோக்கத்தையும் அபிலாசையாக கருதக்கூடாது.

அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற உணர்வோடு, பொது சேவை மற்றும் சமூக நோக்கம் கொண்டவர்களே சிவில் சர்வீசஸ் தேர்வுகளை ஆர்வமுடன் எதிர்கொள்கின்றனர். இத்தேர்வில் வெற்றிப் பெற்று ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பணிபுரிபவர்கள், ராஜதந்திரிகளாக நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவத்தை பெறுகின்றனர். இதேபோன்று ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம் -ஒழுங்கை காப்பதில் மகத்தான பங்களிப்பை ஆற்றுகின்றனர். இத்தகைய பொது சேவை பணிகளுக்கு வழிவகுக்கும் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் குறித்த மத்திய அரசு அதிகாரியின் கேவலமான கருத்துகள், குடிமைப் பணித் தேர்வுகளை எதிர்நோக்கி உள்ள இளைஞர்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதுடன், நாட்டின் வளர்ச்சிக்கு குடிமைப் பணிகள் அதிகாரிகள் ஆற்றிவரும் பங்களிப்பை மறுக்கவோ, மறக்கவோ செய்யும்படி உள்ளன.

ஆனால், யுபிஎஸ்சி தேர்வுகள் குறித்த பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலைச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் எதிர்மறை கருத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் காந்தின் கூற்று. "தனியார் துறைகளில் நினைத்துப் பார்க்க முடியாத ஊதியத்தையும், மனித வளத்தையும் அரசு உங்களுக்கு அளிக்கிறது" என குடிமைப் பணிகள் அதிகாரிகள் குறித்து அவர் அண்மையில் பெருமிதம் தெரிவித்திருந்தார். அதேசமயம், நாட்டின் வளர்ச்சிக்கு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் அவசியம் என்பதையும் அவர் மறுக்கவில்லை. தேசத்தின் வளர்ச்சியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சம பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்று கூறும் அவர், இந்நிறுவனங்களுக்கான கொள்கை, திட்டங்களை வகுப்பதிலும், அவற்றை திறம்பட செயல்படுத்துவதிலும் குடிமைப் பணிகள் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது என்றும் கூறியுள்ளார். அரசு மற்றும் தனியார் நிறுவன பணிகளை தாண்டி, தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள், வெற்றிகரமான தொழிலதிபர்களாக உருவாவதிலும் சிவில் சர்வீசஸ் அதிகாரிகளின் பங்கு உண்டு என்றும் கூறுகிறார் அமிதாப் காந்த்.

காலநிலை மாற்றம், தொழில்நுட்ப முறைகேடுகள், மக்கள்தொகை பெருக்கம் போன்ற நாடு எதிர்நோக்கி உள்ள சமகால பிரச்னைகளுக்கு தீர்வு காண விவேகமும், வேகமும் கொண்ட குடிமைப் பணி அதிகாரிகள் நமக்கு அவசியம் தேவை. 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடு என்ற நிலையை இந்தியா அடையவும் இவர்களின் சேவை இன்றியமையாததாகும். எனவே. சிவில் சர்வீசஸ் அதிகாரிகளாக நாளை உருவெடுக்கவுள்ள UPSC தேர்வு விண்ணப்பதாரர்களை அபிலாஷைகாரர்களாக கருதாமல். அவர்களின் விடாமுயற்சியை, அர்ப்பணிப்பு உணர்வை நாம் கொண்டாட வேண்டும். "எழுந்திரு, விழித்திரு, இலக்கை அடையும்வரை நிறுத்தாதே" என்ற சுவாமி விவேகானந்தரின் வைர வரிகள் இங்கு நினைவுகூரத்தக்கவை.

கட்டுரையாளர்: மிலிந்த் குமார் - பேராசிரியர், எம்பிஎம் பல்கலைக்கழகம், ஜோ

ABOUT THE AUTHOR

...view details