டெல்லி : உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான 13வது மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று (பிப்.26) தொடங்கி வரும் 29 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான மாநாடு என்பது உலகின் பெரிய முடிவுகளை எடுக்கும் சக்தி கொண்ட மாநாடு காணப்படுகிறது.
ஏறத்தாழ 164 உறுப்பினர்கள் ஆண்டுதோறும் ஒன்றுகூடி சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தி தீர்வு காண்பர். உலக வர்த்தக அமைப்பின் 13வது அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா விவசாயப் பிரச்சினைகள் பற்றிய விவாதங்களில் கலந்து கொள்ளாது எனக் கூறப்படுகிறது.
நாட்டின் பொதுக் கொள்முதல் முறையின் முக்கிய அம்சமான பொதுப் பங்குகள் வைத்திருப்பது தொடர்பான பிரச்சினைக்கு உறுப்பினர்கள் முதலில் நிரந்தரத் தீர்வைக் காணாத வரையில், 800 மில்லியன் ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் 95 புள்ளி 3 மில்லியன் வாழ்வாதார நிலை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளிக்கு உரிய தீர்வு காண இயலாது எனக் கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான விவசாயிகள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நிலையில், அவர்களது முக்கிய வாழ்வாதார தேவையாக குறைந்தபட்ச ஆதார விலை என்பது உள்ளது. இதன் மூலமே மத்திய ஆரசு உணவு பாதுகாப்பின் பொது பங்கை உறுதி செய்யவும் பிரதமரின் கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 813 புள்ளி 50 மில்லியன் மக்களுக்கு மாதந்தோறும் இலவச ரேசன் பொருட்களை வழங்க முடியும்.
உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினரான இந்தியா, உலக வர்த்த அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் வளர்ந்த நாடுகளுடன் விவசாய மானியங்கள் மற்றும் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதித்து, பொது பங்கு விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண திட்டமிட்டு உள்ளது.
விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை இந்தியா வழங்கி வரும் அதேவேளையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் விவசாய விளை பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது என்பது வர்த்தக மானியங்களை சிதைக்கக் கூடும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேஷியாவின் பாலியில் நடைபெற்ற 9வது அமைச்சர்கள் மாநாட்டில், உணவு பாதுகாப்பில் பொது பங்கு வைப்பதன் மூலம் உள்ள பிரச்சினைகள் குறித்து நிரந்தர தீர்வு காண்பது கூறித்து 11வது உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டிற்குள் கலந்து ஆலோசிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், உலக வர்த்தக அமைப்பின் மானிய உச்ச வரம்பு விதிகளை மீறும் போது வளரும் நாடுகளுக்கு தேவையான பொருளாதார பாதுகாப்பு வழங்கும் இடைக்கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வரும் நிலையில், இடைக்கால தீர்வை விவசாயம் தொடர்பான ஒப்பந்தத்தின் நிரந்தர விதியாக மாற்ற வேண்டும் என்று இந்தியா விருப்பம் தெரிவித்து உள்ளது.
வளரும் நாடுகளின் G-33 கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க குழு உள்பட 80க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவின் முன்மொழிவை ஆதரிக்கின்றன. மானிய உச்ச வரம்பு குறித்து நிரந்தர தீர்வு காணும் வரை இந்த விதி இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இடைக்கால மற்றும் பெரும் நிவாரணமாக காணப்படுகிறது.
இந்தியா உணவு தானியங்களின் உலகளாவிய முக்கிய உற்பத்தியாளராகவும், மேலும் சொந்த நாட்டு மக்களின் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, உலகின் உணவுப் பாதுகாப்பிலும் பங்களிக்கும் அளவுக்கு பெரிய ஏற்றுமதியாளராகவும் உள்ளது. நாட்டு மக்களுக்கு மானிய விலையில் உணவு பொருட்களை வழங்குவதன் மூலம், உலகளாவிய உணவு விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைத்திருக்க இந்தியா உதவி வருகிறது.
அதேநேரம் அமெரிக்கா போன்ற விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு இந்தியாவின் செயல் என்பது எரிச்சல் அடையக் கூடியதாக காணப்படுகிறது. உலக வர்த்தக அமைப்பு தொடங்கப்பட்ட காலக்கட்டங்களில், சில வளர்ந்த நாடுகள், சர்வதேச சரக்கு வர்த்தகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தன.
உறுப்பினர் நாடுகளின் உலகளாவிய உணவு குறிப்பு விலை மானிய மசோதா உற்பத்தி மதிப்பில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் குறிப்பு விலைக்கு மேல் வழங்குவது வர்த்தகத்தை சீர்குழைப்பாதாக கருதுவதாகும் என பல்வேறு விதிமுறைகளை உருவாக்கி அமல்படுத்தின. கடந்த 1988 மற்றும் தற்போது இதில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.