டெல்லி:உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான 13வது மாநாடு கடந்த மார்ச் 3ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறைவு பெற்றது. சர்வதேச வர்த்தக அமைப்பைப் பற்றி அறிந்த எந்தவொரு அமைப்பும் யூகிக்கக் கூடிய வகையில் இந்த கூட்டத்தில் கணிசமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்த கூட்டத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல் முட்டுக்கட்டை ஏற்படுவதற்கான காரணம் உலக வர்த்தக அமைப்பின் வடிவமைப்பிலேயே இருக்கிறது என்று கூறலாம். இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்களின் மிஞ்சிய செயல்பாடுகளே இதற்கான காரணமாக கூறப்படுகிறது. வர்த்தக ரீதியிலான பிரச்சினைகளை ஒருமித்த கருத்து மற்றும் கூட்டு ஆலோசனையின் படி கொண்டு செல்லவே உலக வர்த்தக அமைப்பு தொடங்கப்பட்ட நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட சில அதிகாரமிக்க உறுப்பினர் நாடுகள் தங்களுக்கு தேவையான நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது பின்னடைவாக கருதப்படுகிறது.
இது போன்ற செயல்கள் காரணமாக உலக வர்த்தக அமைப்பு தொடங்கப்பட்டதன் காரணம் பொய்த்துப் போகும் சூழலுக்கு தள்ளப்படுகிறது. கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் முறையாக சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா அறிமுகம் செய்தது. அமெரிக்காவில் அதிகளவில் விளையும் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா முன்மொழிந்தது.
அதிக மானியத்துடன் தனது வேளாண் பொருட்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையே நோக்கமாக கொண்டு இந்த ஒப்பந்தம் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டது. அமெரிக்காவின் இந்த தந்திர வியூகத்தை பின்பற்றி பல்வேறு நாடுகள் தங்களுக்கு வேண்டிய நாடுகளுடன் தேவையான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முன்மொழிந்து கொண்டன.
உலக வர்த்தக அமைப்பு தொடங்கப்பட்ட போது, கணிசமான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் பல நாடுகளிடையே கையெழுத்தாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தேவைக்கேற்ப விதிகளை மாற்றிக் கொள்ள ஊக்குவிப்பதால் சின்ன மீன்களை, பெரிய மீன்கள் சாப்பிடுவது போல் சிறிய நாடுகளின் வளங்கள் சுரண்டல்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது.
கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 2 வரையிலான உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான 13வது மாநாட்டில் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விவசாயத்திற்கு முன்னுரிமையாக காணப்பட்டது. ஏனெனில் விவசாயிகளுக்கான மானியத்தில் நிலவும் சிக்கல்கள் மற்றும் சந்தையை அணுகுவதில் நிலவும் சிக்கல்கள் முக்கிய காரணியாகும்.
வேளாண் துறையில் இந்திய மற்றும் அதன் கூட்டணி நாடுகள் இடையே உணவு பாதுகாப்பிற்கான பொது பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நீண்ட நெடியது. இந்த பொது பங்கீடு இரண்டு காரணிகளால் முக்கியத்துவம் பெறுகிறது. சந்தையில் வேளான் பொருட்கள் விலை குறைந்த போதும் விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதார விலைக்கு வேளாண் பொருட்களை கொள்முதல் செய்வது.
இரண்டாவதாக, பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 810 மில்லியனுக்கும் அதிகமான ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவதற்காக கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிக மானியத்துடன் கூடிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் கடமையை இதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது.