வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் வீட்டில் சோதனை செய்வதற்காக அமலாக்க துறையினர் இன்று காலை சுமார் 8:55 மணி அளவில் அங்கு வருகை தந்தனர். ஆனால், அங்கு அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்த் இருவரும் இல்லாததால் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டியதானது.
அதனிடையே, அமலாக்கத் துறையினர் கதிர் ஆனந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அப்போது சோதனைக்கு எம்.பி. கதிர் ஆனந்த் ஒப்புகொண்ட நிலையில், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில், கட்சி நிர்வாகி வன்னிய ராஜா, வழக்கறிஞர் பாலாஜி ஆகிய மூவரிடம் அமலாக்கத் துறையினர் அத்தாட்சி கையெழுத்தை பெற்று பிற்பகல் 2:45 மணியளவில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனையை தொடங்கினர். சோதனையின்போது எம்.பி. கதிர் ஆனந்தின் வழக்கறிஞர் பாலாஜியையும் அமலாக்கத் துறையினர் உடன் அழைத்துச் சென்றனர்.
சுத்தி, உளி, கடப்பாரை: இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், சோதனைக்கு இடையே அவர்கள் சுத்தியல், உளி, பெரிய கடப்பாரை ஆகியவற்றை உள்ளே கொண்டு சென்றுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வரை சந்தித்த அமைச்சர்: இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து தன் வீட்டில் நடைபெறும் அமலாக்கத் துறை சோதனை குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின் கோட்டூர்புரத்தில் உள்ள தன் இல்லத்துக்கு புறப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், "வீட்டிற்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை. வேலைக்காரர்களுக்கும் யார் வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சோதனை தொடர்பாக உங்களுக்கு எந்த அளவு தெரியுமோ, அதே அளவுதான் எனக்கும் தெரியும்” என்று துரைமுருகன கூறினார்.
திமுக நிர்வாகி வீட்டில் சோதனை நிறைவு: இதனிடையே, வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள திமுக விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட அணி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவருக்கு சொந்தமான சிமெண்ட் குடோனிலும் சோதனை நடைபெற்றது. சுமார் பதினோரு மணி நேரமாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்த நிலையில், அங்கிருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.