டெல்லி:அண்டை நாட்டில் (இலங்கை) ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், இருதரப்பு உறவுகளை சமநிலையில் வைத்திருக்க முடியும் என்பதற்கு உதாரணமாக, இலங்கையின் புதிய அதிபர் அனுரா குமார திசநாயகேவை சந்தித்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். இந்த சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடந்துள்ளது. குறிப்பாக, இந்த நிகழ்வின் மூலம் இலங்கை அதிபராக பதவியேற்றுள்ள அனுரா குமார திசநாயகேவை சந்தித்த முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஜெய்சங்கர்.
இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த இலங்கை அதிபர், ''இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயணத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு இந்தியாவின் ஆதரவை ஜெய்சங்கர் மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம், பரஸ்பர நன்மை பயக்கும் விஷயங்கள் விவாதிக்கப்பட்டன'' என கூறியிருந்தார்.
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த அறிக்கையின்படி, '' இலங்கை அதிபருடனான சந்திப்பில், உற்பத்தி மற்றும் பரிமாற்றம், எரிபொருள் மற்றும் எல்என்ஜி விநியோகம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் பால் வளர்ச்சி ஆகிய துறைகளில் தற்போதைய முயற்சிகள் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். இலங்கை தரப்பில், பொருளாதார நிலைத்தன்மைக்கு பங்களிப்பார்கள் மற்றும் புதிய வருவாயை வழங்குவார்கள் என்று எடுத்துரைத்தார்கள். இந்தியாவின் பொருளாதார ஆதரவு முக்கியமானது என்று இலங்கை அதிபர் கூறினார். இந்தியாவிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஏற்றுமதியின் சாத்தியக்கூறுகளை அவர் குறிப்பிட்டதாகவும், இந்திய சுற்றுலாப் பயணிகளின் பங்களிப்பைக் சுட்டிக்காட்டியதுடன், இது மேலும் வளர்ச்சியடை சாத்தியம் உள்ளதாகவும் அனுரா குமார திசநாயகே நம்பிக்கை தெரிவித்ததாக'' கூறப்பட்டுள்ளது.
இலங்கை அதிபரை சந்திப்பதற்கு முன்னர், அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேரத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அந்த சந்திப்பின் போது, அண்டை நாடுகளின் முதல் கொள்கையின் (SAGAR) அடிப்படையில் இருதரப்பு ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கான இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை ஜெய்சங்கர் தெரிவித்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களின் மூலம் இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் வளர்ச்சி உதவிகள் தொடரும் என்று ஜெய்சங்கர் உறுதி அளித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையின் புதிய பிரதமர் ஹரினி அமரசூரியவுடனும் சந்திப்பை நடத்தியுள்ளார். அவரிடம் அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் தேவைகள் குறித்து ஆலோசிக்கவும், பதில் அளிக்கவும் இந்திய அரசு தயாராக உள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா - இலங்கையின் இந்த சந்திப்பு இருதரப்பு உறவுகளை சீராக வைத்திருக்க முடிகிறது என்பதை, இலங்கை ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் இருந்தும் தெரிகிறது. மேலும், இந்த சந்திப்பின்போது, அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் மோடியின் சார்பில், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகேவுக்கு இந்தியாவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். இதனால், இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வெகு விரைவில் வர வாய்ப்புள்ளது.
இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே தேசிய மக்கள் சக்தி கூட்டணியி்ல் அங்கம் வகிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவராக இருக்கிறார். இவர் நடந்து முடிந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றிருந்தார். இலங்கை அரசியல் நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு பெரிய கட்சிகளைத் தவிர, வேறொரு மூன்றாவது கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கையின் முதல் அதிபராக குமார திசநாயகே திகழ்கிறார்.
இந்தியா-இலங்கை உறவு என்பது கலாச்சார, மத மற்றும் மொழியியல் தொடர்புகளின் பாரம்பரியத்தால் குறிக்கப்படுகிறது. இரு நாடுகளுடையே, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் கணிசமாகவும் வளர்ச்சியடைந்துள்ளன. மேலும், கல்வி, கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளின் வளர்ச்சியிலும் ஒத்துழைப்பு உள்ளது.
2022 இல் இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்கியது. இலங்கையின் கடனை மறுசீரமைக்க உதவுவதற்காக சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் கடனாளிகளுடன் ஒத்துழைப்பதில் இந்தியாவும் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்தியாவின் தெற்கு கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள இலங்கை, இந்தியாவிற்கு மிகப்பெரிய புவிசார் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. உட்கட்டமைப்பு திட்டங்களில் சீன முதலீடுகள் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிலையான வளர்ச்சி உட்பட, இலங்கையில் சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் செல்வாக்கு குறித்து இந்தியா கவலைகளை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் சீனாவை தனது பிராந்தியத்தில் இருந்து விலக்கி வைக்கவும் இந்தியா முயற்சித்து வருகிறது.
கடந்த ஆண்டு சீனாவுக்கு ஆதரவாகக் கருதப்படும் முகமது முய்சு மாலத்தீவு அதிபராக தேர்தெடுக்கப்பட்ட பிறகு இந்தியா-மாலத்தீவு உறவு மோசமடைந்தது. அதிபர் தேர்தலின் போது, முய்ஸு 'இந்தியா அவுட்' என்று பிரச்சாரம் செய்தார். அதனை தொடர்ந்து அதிபராக வெற்றி பெற்றதும், மாலத்தீவில் ஒரு சில இந்தியப் பாதுகாப்புப் பணியாளர்களைத் திரும்பப் பெறுவதாகவும் கூறினார். ஆனால், அதுபோல் இல்லாமல் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இலங்கையுடனான நல்லுறவை இந்தியா தக்க வைத்துள்ளது.