வேலூர்: வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த காளாம்பட்டு பகுதியில் பழுதடைந்து பயன்படாமல் ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தது. இதனை இடித்துவிட்டு புதிதாக மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் 15 வது நிதிக்குழு மானியத்தின் மூலம் சுமார் 42 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டது. இதற்கான டெண்டரை காட்பாடியை சேர்ந்த கட்டுமான பொறியாளர் செல்வம் பெற்றார்.
இதனையடுத்து உடனடியாக பணியை ஆரம்பித்த அவர் கடந்த 23ஆம் தேதி பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த காளாம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திமுகவைச் சேர்ந்த பானுபிரியா கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி பிரச்சனையில் ஈடுபட்டார்.
அப்போது அவர், '' இப்பகுதியில் கட்டுமான ஒப்பந்தத்தை நாங்கள் தான் பெறுவோம். வெளியூரை சேர்ந்த நீங்கள் எப்படி எடுத்து செய்யலாம்? உடனே கட்டுமான பணியை நிறுத்திக்கொள்ளுங்கள்'' எனக்கூறி பிரச்சனை செய்ததால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரி பள்ளி மாணவி விவகாரம்: கைதான ஆசிரியர்களின் புகைப்படங்கள் வெளியீடு!
இதுகுறித்து ஒப்பததாரர் செல்வம் பணமடங்கி காவல் நிலையம் மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் (என்சிஎஸ்சி) புகார் அளித்தார். இந்நிலையில், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இருந்து கடந்த 28ஆம் தேதி வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிவாணன் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலக்ஷ்மி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆணையம் நோட்டீஸ்
அதில், ''இந்த புகார் குறித்து உடனடியாக விசாரணை செய்து எஃப்ஐஆர் பதிவு செய்து 15 நாட்களுக்குள் முழு விவரங்களை அளிக்க வேண்டும்'' என குறிப்பிட்டிருந்தது. ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என ஒப்பததாரர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று (பிப்.6) மீண்டும் ஒப்பந்ததாரர் செல்வம் பணியை துவக்குவதற்காக அங்கு சென்று ஜேசிபி மூலம் பழைய கட்டிடத்தை இடிக்க முயன்றார். அப்போது அங்கு வந்த காளாம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா ஜேசிபி-யின் முன் நின்று மீண்டும் பணி செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணியை நிறுத்தினார். இதனால் இன்றும் அந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டும் கூட காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி மன்ற தலைவி தொடர்ந்து பிரச்சனை செய்து வருவதாக ஒப்பததாரர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.