சீம்பால் பற்றி கேள்விப்படாமல் பலரும் இளம் வயதை கடந்திருக்க முடியாது. கன்று ஈன்ற பசுமாட்டில் முதல் மூன்று நாட்களுக்கு உற்பத்தியாகும் பால் தான் 'சீம்பால்'. இளம் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் சீம்பாலின் சுவைக்காக, மாடு எப்போது கன்று ஈனும், எப்போது சீம்பால் கிடைக்கும் என இன்றளவும் பல சீம்பால் பிரியர்கள் காத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி, சீம்பாலில் என்ன தான் இருக்கிறது? அதை சுவையாக எப்படி செய்வது? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- சீம்பால் - 1/2 லிட்டர்
- சர்க்கரை/ நாட்டு சர்க்கரை - 400 கிராம்
- சுக்கு - 1 சின்ன துண்டு
- மிளகு - 1 டீஸ்பூன்
- ஏலக்காய் - 2
சீம்பால் செய்முறை:
- முதலில், சீம்பால் இருக்கும் பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும். (சர்க்கரை நன்கு கரையவில்லை என்றால், வேக வைக்கும் போது சர்க்கரை முழுவதும் அடியில் தங்கிவிடும்).
- அதேபோல, சுக்கு, மிளகு மற்றும் ஏலக்காயை பொடியாக அரைத்து, பாலில் சேர்த்து கலக்கவும்.
- இப்போது, இட்லி பாத்திரத்தில் 1/4 பங்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து, பால் பாத்திரத்தை மூடி உள்ளே வைக்கவும்.
- பின்னர், இட்லி பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 20 முதல் 25 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். 20 நிமிடங்களுக்கு பிறகு, குச்சி அல்லது கத்தி கொண்டு பாலை குத்தி பார்க்க வேண்டும்.
- கத்தியில் பால் ஒட்டாமல் வரும் போது, அடுப்பை அணைத்து 1 மணி நேரம் வரை ஆற வைக்கவும். அதன் பின், பாத்திரத்தில் இருப்பதை தட்டிற்கு மாற்றி துண்டுகள் போட்டால் சத்து நிறைந்த சீம்பால் தயார்.
காய்ச்சும் முறை: சீம்பாலில் ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை சேர்க்கவும். இப்போது, அடுப்பில் பால் இருக்கும் பாத்திரத்தை வைத்து, 15 நிமிடங்களுக்கு நன்கு கிளறி விடவும். பால் திரிவது போல் வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆற வைத்து சாப்பிடவும். இந்த பாலில், டீ, காபி போட ஏற்றதாக இருக்காது.