தமிழர்களின் பாரம்பரியமான கொண்டாட்டங்களில் மிகவும் முக்கியமானது அறுவடை திருநாளாம் பொங்கல். ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும் உணவுக்கு காரணமாக இருக்கும் உழவுத் தொழில், கால்நடை மற்றும் இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக வழிபடுவதை, நாம் பொங்கலாகக் கொண்டாடுகிறோம். தை முதல் நாளை பொங்கல் பண்டிகையான கொண்டாட்டப்படும் நாட்களில், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு சடங்கு சம்பிரதாயங்களுடன் மக்கள் கொண்டாடுகின்றனர். அந்த விழாக்களின் பெயர்கள் என்ன? எங்கு எப்படி கொண்டாடப்படுகிறது? என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
மகர சங்கராந்தி(Makar sankranti): மகரம் என்பது சமஸ்கிரதத்தில் தமிழ் மாதங்களில் தை மாதத்தை குறிக்கின்றது. தை முதல் நாளில், தனுசு ராசியில் இருக்கும் சூரிய பகவான் மகர ராசிக்கு இடம்பெயர்ந்து செல்வதை 'மகர சங்கராந்தி' (Makar sankranti) எனும் பெயரில் பல மாநிலங்கள் கொண்டாடுகின்றன. ஆந்திரா, தெலங்கானா, குஜராத் முதல் மேற்கு வங்காளம் வரை மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது.
பொங்கல் நாளில் தமிழகத்தில் செய்யப்படும் சடங்குகளை போலவே ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் வண்ணமயமான பட்டங்களை வானத்தில் பறக்க விட்டு கொண்டாடுகின்றனர். மகாராஷ்டிராவில், கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட வெல்லத்தை பயன்படுத்தி இனிப்பு செய்து கொண்டாடப்படுகிறது.
லோஹ்ரி (பஞ்சாப்):பஞ்சாப் மாநிலத்தில் அறுவடைத் திருவிழா லோஹ்ரி (Lohri) என்ற பெயரில் ஆண்டுதோறும் பிரமாண்டமாக கொண்டாடப்படும். பொங்கலுக்கு முந்தைய நாள் இரவில், குடும்பத்தினர்களும் நண்பர்களும் எரியும் நெருப்பைச் சுற்றி கூடி, நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி, பாங்க்ரா நடனமாடி கொண்டாடுவார்கள். எள், வெல்லம் மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை நெருப்பில் வீசுவது அவர்களது சடங்கில் ஒன்று. அதை தொடர்ந்து அவர்களது பாரம்பரிய உணவான மக்கி டி ரொட்டி மற்றும் சர்சன் டா சாக் ஆகியவற்றை செய்தும் உண்பது வழக்கம்.