4 கப் அரிசி மாவு, கால் கப் வெண்ணெய்..தீபாவளி ஸ்பெஷல் பட்டர் முறுக்கு ரெடி!
தீபாவளி திருநாளில் தவிர்க்க முடியாத பலகாரமாக இருப்பது முறுக்கு தான். அப்படி வழக்கமாக நாம் செய்யும் முறுக்கிற்கு பதிலாக இந்த தீபாவளிக்கு மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும் பட்டர் முறுக்கை செய்து அசத்துங்கள்..
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், வீடுகளில் என்ன பலகாரம் செய்யலாம் என்ற சிந்தனையும் வரத் தொடங்கி விடுகிறது. அந்த வகையில் தீபாவளி பலகாரம் என்றால் அந்த லிஸ்டில் முதல் இடம் பிடிப்பது முறுக்குதான். ஆனால் வருடா வருடம் ஒரே முறுக்கை செய்வதற்கு பதிலாக, கொஞ்சம் கூடுதல் சுவையும், மொறு மொறுப்பாக இருக்கும் பட்டர் முறுக்கை செய்து பாருங்கள்...
முதலில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கடலைப்பருப்பு,பாசி பருப்பு,வெள்ளை உளுந்து ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும் (மிதமான தீயில் வறுப்பதை உறுதி செய்யவும்)
அதன் பிறகு, அவற்றை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் நைசாக அரைக்கவும். பின்னர், இந்த அரைத்த மாவை நன்றாக சலிக்கவும். சலித்த மாவை மீண்டும் மிக்சியில் சேர்க்கவும்
இப்போது சலித்த மாவுடன், அரிசி மாவு, ஓமம், எள் மற்றும் காரத்திற்கு தேவையான மிளகாய் பொடி சேர்த்து அரைக்கவும்
இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி வெண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும்
அதன் பிறகு, இந்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக வெதுவெதுப்பான தண்ணீரை சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள் ( மாவு கடினமாகவும், ரொம்ப சாப்டாகவும் இருக்க கூடாது)
இதற்கிடையில், அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
இப்போது, நாம் பிணைந்து வைத்த முறுக்கு மாவை எண்ணெயில் பிழிந்து விடவும்
ஒரு புறம் வெந்ததும் முறுக்குகளை மறுபுறம் திருப்பி விடவும்
முறுக்குகளில் எண்ணெய் குமிழி அடங்கியது எடுத்தால் மொறுமொறுப்பான பட்டர் முறுக்கி ரெடி (முறுக்குகளை மிதமான தீயில் சுடவேண்டும்)
காற்று புகாத பாத்திரங்களில் முறுக்குகளை வைப்பதன் மூலம் ஒரு மாதம் வரையிலும் முறுக்குகளை சேமித்து வைக்கலாம்.