வீட்டில் கொசுக்கள் இருந்தால் சாதாரண கொசு கடி, இரவில் தூங்க விடாமல் செய்வதில் தொடங்கி டெங்கு, மலோரியா போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதுவும் மழைக்காலங்களில் சொல்லவே தேவையில்லை. கொசுக்களை விரட்ட மார்க்கெட்டில் பல பொருட்கள் இருந்தாலும், சில நேரங்களில் அவை பயனற்றதாகவும், உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. இந்நிலையில், நம் வீட்டில் படையெடுக்கும் கொசுக்களை எப்படி இயற்கையான பொருட்களை வைத்து விரட்டுவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பிரியாணி இலை: 5 முதல் 6 கற்பூரங்களை 2 டேபிள் ஸ்பூன் வேப்ப எண்ணெயில் சேர்த்து உருக்கிக் கொள்ளவும். பின்னர், இந்த கலவையை பிரியாணி இலைகளில் தடவி, மாலை நேரத்தில் மண்சட்டி அல்லது தேங்காய் சிரட்டையில் வைத்து எரிக்கவும். இதில் இருந்து வரும் புகையின் காட்டம் தாங்க முடியாமல் கொசு ஓடிவிடும்.
எலுமிச்சையில் கிராம்பு: எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அதில் கிராம்புகளை குத்தி வைத்து படுக்கைக்கு அருகில் அல்லது தூங்கும் இடத்திற்கு அருகில் வைத்தால் கொசு வராது.
பூண்டு: பூண்டு வாசனை கொசுகளுக்கு பிடிக்காது என்பதால், 1 கிளாஸ் தண்ணீரில் 6 பூண்டு பற்களை தட்டி சேர்த்து கொத்திக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும், அடுப்பை அணைத்து ஆறவைத்த பின்னர், ஸ்ப்ரே பாடிலில் ஊற்றி வீட்டிற்குள் ஸ்ப்ரே செய்து வந்தால் கொசுக்கள் அண்டாது.