இன்றைய காலக்கட்டத்தில் இளம்தலைமுறையினர் முதல் பெரியவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை முடி சம்பந்தப்பட்ட பிரச்சனையாக தான் இருக்கிறது. பள்ளி படிப்பை முடிந்தவுடன் முடியை பின்னி போடும் பழக்கத்தையும் பலர் முடித்துக்கொள்கின்றனர்.
தற்போது, பெரும்பாலானோர் ஃப்ரீ ஹேர், போனிடைல் எனப்படும் குதிரைவால் போட்டு கல்லூரிக்கும், வேலைக்கும் சென்று வருகின்றனர். இதுமட்டுமா? பலரும் தூங்கும் போது கூட கூந்தலை விரித்து போட்டு தூங்குகின்றனர். இப்படியிருக்க, இரவு தூங்கும் முன் முடியை பின்னி கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
வறட்சியை தடுக்கும்: இரவில், கூந்தலை விரித்து வைத்து தூங்குவது கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை எடுத்து தலையில் வறட்சியை ஏற்படுத்துகிறது. இதனால், முடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இரவில், முடியை நன்கு சீவி பின்னி தூங்கும் போது, முடியின் ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. இதனால், முடி பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்.
முடி உதிர்வு பிரச்சனை நீங்கும்: ஃப்ரீ ஹேரில் தூங்கும் போது, முடி சேதமடையும் வாய்ப்புகள் அதிகம். தூங்குவதற்கு முன் முடியை சீவி ஜடை போடுவதால், தலையில் இரத்த ஓட்டம் சீராக நடைபெற்று முடி உதிர்வை தடுக்கும். கூடுதலாக, நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கும். ஜடை போடுவதால், முடி ஒன்றோடு ஒன்று உரசாமல் இருந்து, முடி சேதமடைவதை தடுக்கும்.
முகப்பரு நீங்கும்: முகத்தில் பரு ஏற்படுவதற்கு கூந்தலும் ஒரு காரணியாக தான் இருக்கிறது. தூங்கும் போது, முடியை விரித்துவிட்டு தூங்குவதால், முடியில் உள்ள அழுக்கு, பொடுகு, தூசுகள் முகத்தில் படிந்து விடுகின்றன. இதனால், பரு போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முகம் தெளிவாக, பளபளப்பாக இருக்க தூங்கும் போது ஜடை போட்டு தூங்குங்கள்.