இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற முதல் கொரியர் என்ற பொருமையை பெற்றுள்ளார் ஹான் காங் (Han Kang). வரலாற்று துயரங்களையும், மனித வாழ்வின் பலவீனத்தையும் கவித்துவமான மொழியில் அவர் எழுதும் அழகான உரைநடைக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது. 1993ம் ஆண்டு முதல் பத்திரிகைகளில் கவிதைகளை எழுத ஆரம்பித்த ஹான் கான், சிறுகதைகள், நாவல்கள் என எண்ணற்ற படைப்புகளை வழங்கியுள்ளார்.
இவரது படைப்புகள் மனித வாழ்வின் சங்கடமான உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. இதுவரை, ஹான் காங்கின் புத்தங்களை நீங்கள் படித்தது இல்லை என்றால், நீங்கள் தொடங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் இதோ..ஹான் காங்கின் இந்த நாவல்கள் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையைப் பற்றிய பார்வையை மாற்றும்.
தி வெஜிடேரியன் (The Vegetarian):ஹான் காங்கை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற நாவல் தான் இந்த 'தி வெஜிடேரியன்'. வாழ்வில் நடந்த சம்பவங்களால் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் வன்முறையான விளைவுகளை இந்த நாவல் சித்தரிக்கிறது. 2016ல் இந்த நாவல் புக்கர் பரிசை வென்றது.
2007ல் கொரிய மொழியில் பரிசுரமான இந்த நாவல், 2015ம் ஆண்டு டெபோரா ஸ்மித் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில், 'மரக்கறி' என்ற பெயரில் இந்த நாவை வெளியாகியுள்ளது. இதை சமயவேல் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.
ஹூயுமன் ஆக்ட்ஸ் (Human Acts):1980ல் தென் கொரியாவில் ராணுவத்தால் கொல்லப்பட்ட குவாங்ஜூ மக்களின் வாழ்க்கையின் அடிப்படையாக கொண்டு, 2014ல் ஹூயுமன் ஆக்ட்ஸ் (Human Acts) என்ற ஹான் காங்கின் படைப்பு வெளியானது. இந்த புத்தகம் வன்முறை, அதிர்ச்சி, கொடூரம் என அந்த வரலாற்று நிகழ்வின் போது இருந்த மக்களின் குரலை வெளிபடுத்துகிறது. மனிதன் எதிர்கொண்ட மிகுந்த துக்கத்தையும் வாழ்க்கையின் பலவீனத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த நாவல், 2018ம் ஆண்டு புக்கர் விருதுக்கான இறுதிச்சுற்று வரை சென்றது.
தி ஒயிட் புக் (The White Book):பிறந்த இரண்டு மணி நேரத்தில் இறந்த தனது உடன்பிறந்த சகோதிரியின் இழப்பை பற்றி சித்தரிக்கிறது இந்த புத்தகம். பிறப்பிற்கும் இறப்பிற்குமான கதையை ஹான் காங் தனது கவிதை மொழியில் பிரதிபலித்துள்ளார். ஒரு மனிதன், இழப்பையும் அதனால் வரும் துக்கத்தையும் எப்படி சமாளிக்கிறான் என்பதை கண்முன் நிறுத்தி செல்கிறது இந்த புத்தகம்.