மாநிறம், சிவப்பு என நாம் எந்த நிறத்தில் இருந்தாலும் நம்மில் பலருக்கு முழங்கால் மற்றும் முழங்கைகள் கருமையாக இருக்கும். இதை பற்றி கவலை இருந்தாலும், அதை பெரும்பாலானோர் கண்டுகொள்ளாமல் எந்த முயற்சியும் எடுப்பது கிடையாது. ஆனால், உங்கள் கை, கால்களில் உள்ள கருமையை நீக்குவதற்கு வீட்டில் உள்ள சில பொருட்களே போதுமானதாக இருக்கிறது. அது என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்..
தேங்காய் எண்ணெய் மற்றும் வால்நட்ஸ்: ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் வால்நட் பவுடரை கலந்து பேஸ்ட் செய்யவும். இந்த கலவையை உங்கள் முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் தடவி மூன்று நிமிடங்கள் ஸ்க்ரப் செய்து 15 நிமிடங்களுக்கு பின் கழுவவும். இதை வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது செய்து வர நல்ல மாற்றம் ஏற்படும். தினமும் இரவு படுக்கச் செல்வதற்கு முன் உடலின் கருமையான பகுதிகளில் தேங்காய் எண்ணெயைத் தடவுவதும் நல்லது. இது சருமத்தை நீரேற்றமாகவும், ஈரப்பதமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
ஆப்பிள் சைடர் வினிகர்: ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை 3 டீஸ்பூன் தண்ணீரில் சேர்த்து கலக்கவும். இந்தக் கலவையை முழங்கால்கள் மற்றும் முழங்கைகளில் பருத்தியைப் பயன்படுத்திப் தடவி, 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். இதை வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை செய்து வந்தால் கருமையான சருமம் நீங்கும்.
உருளைக்கிழங்கு சாறு: உருளைக்கிழங்கு சாற்றை முழங்கால்கள் மற்றும் முழங்கைகளில் தடவவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். கருமையான சரும நிறம் மறையும் வரை இதை தினமும் இரண்டு முறை செய்யவும்.
வெள்ளரிக்காய் மற்றும் மஞ்சள்: வெள்ளரிக்காய் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்தது. வெள்ளரிக்காய் சாற்றில் மஞ்சள் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இதை அடர் நிறப் பகுதிகளில் தடவி, 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். இதை தினமும் இரண்டு முறை செய்யவும். இது முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் உள்ள கரும்புள்ளிகளைப் போக்கவும், சருமத்தைப் புத்துணர்ச்சியடைய செய்யவும் உதவும்.
சமையல் சோடா மற்றும் பால்: இரண்டு தேக்கரண்டி சமையல் சோடாவுடன் சிறிது பால் சேர்த்து, பேஸ்ட் போல கலக்கவும். இதை முழங்கால்கள் மற்றும் முழங்கைகளில் தடவி மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவவும். கருமை நிறம் மறையும் வரை இதை தினமும் இரண்டு முறை செய்யவும். இது இறந்த சரும செல்களை அகற்ற உதவும். இது சருமத்தில் ஈரப்பதத்தை பராமரிக்கவும் உதவும்.
தயிர் மற்றும் வினிகர்: ஒரு தேக்கரண்டி புளிப்பு தயிருடன் ஒரு தேக்கரண்டி வினிகர் மற்றும் ஒரு தேக்கரண்டி கடலைமாவு சேர்த்து கலக்கவும். இந்தக் கலவையை கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது சருமத்தை பிரகாசமாக்குவதற்கும் ஈரப்பதத்தை பராமரிப்பதற்கும் உதவுகிறது.
சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெய்: இரண்டையும் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து நன்கு கலக்கவும். பின்னர், இந்தக் கலவையை முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் தடவி தேய்க்கவும். இந்த கலவை இறந்த சரும செல்களை நீக்கி, கரும்புள்ளிகளை நீக்க உதவும்.
இதையும் படிங்க: முகத்தில் எண்ணெய் வழியுதா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணிப்பாருங்க! |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.