தூத்துக்குடி: திரேஸ்புரம் அண்ணா காலனியில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த வலி நிவாரணி மாத்திரைகளைத் தூத்துக்குடி க்யூ பிரிவு போலீசார் கைப்பற்றி, கடத்தல்காரர்களைக் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு அவ்வப்போது மஞ்சள், பீடி இலைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக் கொல்லி மருந்து ஆகியவை கடத்தப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதைத் தடுப்பதற்காகத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவல்:
இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரையில் வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று (பிப்.21) திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரையில் படகு மூலம் இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் இருவர் சில பார்சல்களை ஏற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்த க்யூ போலீசார் இரண்டு பேரையும் சுற்றி வளைத்து கைது செய்து, படகைச் சோதனையிட்டனர்.
கடத்தவிருந்த பொருட்கள் சிக்கியது எப்படி:
அந்த சோதனையில் இலங்கைக்கு கடத்தவிருந்த Pregabalin (150 Mg) என்ற வலி நிவாரணி மாத்திரைகள் 3 லட்சத்து 15 ஆயிரம் எண்ணிக்கையில் பத்து மூட்டைகளை க்யூ பிரிவு போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஜெனிஸ்டன் (20) மற்றும் தூத்துக்குடி அன்னை தெரசா காலனியைச் சார்ந்த அனிஸ்(25) என்பதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: போதை பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
இதையும் படிங்க: மகாராஷ்டிரா டூ வியாசர்பாடி! கொள்ளை அடிப்பதற்காகச் சென்னை வந்த பலே திருடர்கள் - சிக்கியது எப்படி?
தீவிர கண்காணிப்பில் போலீசார்:
இதில் கைப்பற்றப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளின் மதிப்பு ரூபாய் 75 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இதேபோல் திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரை பகுதியில் இது போன்ற சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறாத வகையில் க்யூ பிரிவு போலீசார் பலத்த ரோந்து பணியிலும், தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.