மயிலாடுதுறை: மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்கம் சார்பில் உலக தாய்மொழி தினம் நேற்று (பிப்.21) கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்கத் தலைவர் பவுல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு, ”உயிரே.. உணர்வே.. தமிழே…” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு பிறகு நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழில் உள்ளதைப் போன்ற செவ்விலக்கியங்கள் இந்தியில் ஒன்று கூட கிடையாது. துளசிதாசர் ராமாயணம் எழுதுவதற்கு முன்னர் இந்தி மொழியில் ஒரு குப்பை கூட கிடையாது. ஆனால், இந்தியை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். அதற்கு பல மாநிலங்கள் பலியாகியுள்ளதைப் போல, தமிழ்நாடும் பலியாக வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
5000 ஆண்டு தொன்மையுள்ள தமிழை ரூ.2,252 கோடிக்காக பலி கொடுக்க தமிழ்நாடு அரசு தயாராக இல்லை என்று கூறியதன் மூலம் முதுகெலும்புள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை தமிழ்நாடு பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மொழிப்போர் உருவாகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது” என கூறினார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் ஐந்து ஆயிரம் கோடி நிதியில் பாதிப்பு ஏற்படலாம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், “பெரியாரை தொடர்ந்து விமர்சிப்பது தான் தனது வேலை என்று எந்த எஜமானர் இடத்தில் கூலி வாங்கிக் கொண்டு பேசுகிறார் என கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை; மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ கண்டனம்!
மேலும் ஆளுநரின் செயல்பாடு குறித்து கேட்ட போது, தமிழ்நாடு ஆளுநர் ஆதிக்கத்தின் சின்னமாக இருப்பதாகவும், சனாதன கூலியாகவும் செயல்படுவதாகவும் விமர்சித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உடன் இருந்தார்.