கீவ் (உக்ரைன்):பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக நேற்று (ஜூலை 8) ரஷ்யா சென்றடைந்தார். இப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, அவரது இல்லத்தில் மோடி சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக, புதின் அவரை ஆரத்தழுவி கொண்டார். இரு தலைவர்களும் ஆரத்தழுவியபடி சில நொடிகள் பேசும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவியது தமக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உக்ரைன் அதிபர் விளாடிமிிர் ஜெலன்ஸ்கி தெரிவி்த்துள்ளார். பதினை உலகின் மிகக் கொடிய, ரத்தக்கறை படிந்த குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ள ஜெலன்ஸ்கி, அவரை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் ஆரத்தழுவலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெலன்ஸ்கி தமது எக்ஸ் வலைதளத்தில் பக்கத்தில் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உக்ரைனில் உள்ள பெரிய குழந்தைகள் நல மருத்துவமனையை குறிவைத்து இன்று ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இளம் புற்றுநோயாளிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இக்கொடூர தாக்குதலில், மூன்று குழந்தைகள் உட்பட 37 பேர் உயிரிழந்துள்ளனர். 13 குழந்தைகள் உட்பட 170 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலர் மருத்துவமனை கட்டட இடிப்பாடுகளின் கீழ் புதைத்துள்ளனர். இத்தகைய மோசமான தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ள அதே நாளில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர். உலகின் மிகக் கொடிய, ரத்தக்கறை படிந்த குற்றவாளியை ஆரத்தழுவியுள்ள நிகழ்வு எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அமைதிக்கான முயற்சிகளின் மீது விழுந்துள்ள மிகப்பெரிய அடி இது" என்று தமது பதிவில் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.