சென்னை(தாம்பரம்): ஃபெஞ்சல் புயல் காரணமாக அதிக கன மழையுடன் பலத்த காற்று வீசுவதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவுறுத்தினார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாம்பரம் மாநகரப் பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் புது பெருங்களத்தூர் அடுத்த இரும்புலியூர் காயத்ரி நகர் பகுதியில் குடியிருப்பில் இடுப்பளவிற்கு மழை நீர் சுழிந்து பெரும் பாதிப்புக்கு உள்ளானது இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திற்க்கு சென்ற அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள், ராட்சச மோட்டார் மூலம் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.இதனை சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் ,தாம்பரம் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயல்: கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்!
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், "மக்கள் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் குடியிருப்பு நல சங்கங்கள் அனைத்து தரப்பினரும் இணைந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மின் மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்தி வருகிறோம். மேலும் தாம்பரம் மாநகராட்சியில் மழை வெள்ள பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்ய இயந்திரங்கள்,மின்மோட்டார்கள், மணல் மூட்டைகள், படகுகள், 2600 ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர் எவ்வளவு மழை பெய்தாலும் அதனை சமாளிக்க அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அடையாறுக்கு செல்ல வேண்டிய கால்வாய்களை சீரமைக்க 96 கோடியில் பணிகள் நடைபெற்ற வருகிறது 80 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் 20% பணிகள் மட்டும் இன்னும் மீதம் உள்ளது, மழை முடிந்தவுடன் பணிகளை துரிதப்படுத்தி விரைவாக அந்த பணி முடிக்கப்படும். அடுத்த மழைக்கு இங்கு எந்த பிரச்சினையும் வராத அளவுக்கு சரி செய்யப்படும். இரவில் கடுமையான மழை இருக்கும் என சொல்கிறார்கள் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் உள்ளே இருக்க வேண்டும், தேவையின்றி வெளியே வரக்கூடாது,"என இவ்வாறு கூறினார்