கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான ஃபெஞ்சல் காரைக்காலிற்கும் - மகாபலிபுரத்திற்கும் இடையே கரையை கடந்து வருகிறது. புயல் கரையைக் கடந்த பின்னர் கோவை மாவட்டத்தில் டிசம்பர் 1 ம் தேதி முதல் 3 ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மழையின் போது பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, "24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளில் இருக்க வேண்டும்.
கட்டுமான நிறுவனங்கள் தங்களது கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்களை நிலைநிறுத்த வேண்டும். .விளம்பரப்போர்டுகள் வைத்திருப்பவர்கள் அதை பாதுகாப்பாக இறக்கி வைக்க வேண்டும். பொதுமக்கள் நீர்நிலைகளில் துணி துவைக்கவோ, குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் செல்பி (Selfie) எடுக்கவோ செல்வதை தவிர்க்க வேண்டும். தரைப்பாலங்களில் வெள்ளநீர் செல்லும்போது அதன் வழியாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயல்: வானில் வட்டமடித்த விமானங்கள்; ஸ்தம்பித்த விமான நிலையம்!
வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும், அணைக்கட்டு பகுதிகளுக்கும்,நீர்வீழ்ச்சிகளுக்கும் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ஆற்றங்கரைகள் மற்றும் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும், மழையின் போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்,"எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை குறித்து கோவை வெதர்மேன் என்றழைக்கப்படும் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், "புயல் சின்னம் கடக்கும்போது அது கோவைக்கு வருவது போல் உள்ளது என்றும் 1977 ஆம் ஆண்டுக்கு பிறகு கொங்கு மண்டலம் வழியாக இந்த புயல் சின்னமானது பயணிக்கப் போகிறது. இதன் மூலம் கொங்கு பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
குறிப்பாக கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி நாமக்கல் சேலம் கரூர் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது 15 சென்டிமீட்டரில் இருந்து 25 சென்டிமீட்டர் வரை மழையை எதிர்பார்க்கலாம். இது மிகவும் அரிதான நிகழ்வு, குறிப்பாக நீலகிரி பகுதிகளில் அதீத கன மழை இருக்கும் 30 முதல் 40 சென்டிமீட்டர் வரையிலான மழையை கூட எதிர்பார்க்கலாம்,"எனத்தெரிவித்தார்.