சென்னை: ஃபெஞ்சல் புயல் கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று ( நவ 30) தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. வட தமிழக கடற்கரையிலிருந்து சுமார் 40 கிமீ தொலைவில், மகாபலிபுரத்திலிருந்து 50 கிமீ தென்-தென்கிழக்கே, புதுச்சேரியிலிருந்து 60 கிமீ கிழக்கு-வடகிழக்கே மற்றும் சென்னைக்கு தெற்கே 90 கி.மீ அருகில் ஃபெஞ்சல் புயல் உள்ளது.
மேலும், ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டது எனவும், அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் மணிக்கு 70-80 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் - மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று முதலே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, தாம்பரம் மாநகரப் பகுதியில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் அதிக கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து, அப்பகுதிகள் முழுவதும் குளம் போல் காட்சியளித்தன.
குறிப்பாக, மேற்கு தாம்பரத்திலிருந்து கிழக்கு தாம்பரத்தை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : ஃபெஞ்சல் புயல்: கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரடி விசிட்; களநிலவரங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
இந்த நிலையில், இப்பகுதியை காண்பதற்காக நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில் செய்தியாளர் சுபாஷ் சென்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
அந்த வகையில் கிழக்கு தாம்பரத்தில் இருந்து மேற்கு தாம்பரத்தை இணைக்கக்கூடிய ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கி இருப்பதால், போலீசார் சார்பில் இப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு தாம்பரத்தில் இருந்து மேற்கு தாம்பரம் செல்வதற்கு 3 கி.மீ சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை மின் மோட்டார் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வந்த நிலையில், 2 மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததன் காரணமாக, மோட்டார் மூலம் தண்ணீர் இரைக்கும் பணி தோய்வு ஏற்பட்டது.
தற்போது இங்கு அதிகமாக நீர் சூழ்ந்துள்ளதால் இப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு பின் இப்பகுதியில் உள்ள நீர் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.